மாநில கட்சி அந்தஸ்து பா.ம.க.,வுக்கு இல்லை
மாநில கட்சி அந்தஸ்து பா.ம.க.,வுக்கு இல்லை
மாநில கட்சி அந்தஸ்து பா.ம.க.,வுக்கு இல்லை
ADDED : ஜூன் 06, 2024 04:54 AM

சென்னை: லோக்சபா தேர்தலில், 4.32 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ள பா.ம.க.,வால், மாநில கட்சி அந்தஸ்தை மீண்டும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பா.ஜ., கூட்டணியில் அரக்கோணம், ஆரணி, கடலுார், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, சேலம், விழுப்புரம் ஆகிய, 10 தொகுதிகளில் பா.ம.க., போட்டியிட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தர்மபுரி உட்பட அனைத்திலும் தோல்வி அடைந்தது.
அதிகபட்சமாக தர்மபுரியில், 4 லட்சத்து, 11,367 ஓட்டுகளைப் பெற்று, அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடிததுள்ளது.
அரக்கோணம், ஆரணி, கடலுாரில், 2 லட்சத்திற்கும் அதிகமாகவும், ஐந்து தொகுதிகளில் 1 லட்சத்திற்கு அதிகமாகவும் ஓட்டுகளைப் பெற்று, மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.
மிக குறைந்த அளவாக கள்ளக்குறிச்சியில் 71,290 ஓட்டுகள் பெற்றது.
இங்கு நாம் தமிழர் கட்சிக்கு அடுத்து, நான்காவது இடத்திற்கு பா.ம.க., தள்ளப்பட்டுள்ளது. பத்து தொகுதிகளிலும் மொத்தமாக, 18 லட்சத்து 79,686 ஓட்டுகள், அதாவது 4.32 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ளது.
கடந்த, 2009, 2014, 2019 லோக்சபா, 2011, 2016, 2021 சட்டசபை என தொடர் தோல்விகளால், தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை, பா.ம.க., இழந்தது.
அதை திரும்ப பெற முடியாத நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டு உள்ளது.