இடைத்தேர்தலுக்காக நாட்கள் குறைப்பு; 20 முதல் 29 வரை சட்டசபை கூட்டம்
இடைத்தேர்தலுக்காக நாட்கள் குறைப்பு; 20 முதல் 29 வரை சட்டசபை கூட்டம்
இடைத்தேர்தலுக்காக நாட்கள் குறைப்பு; 20 முதல் 29 வரை சட்டசபை கூட்டம்
UPDATED : ஜூன் 13, 2024 04:59 AM
ADDED : ஜூன் 13, 2024 04:58 AM

சென்னை: ''தமிழக சட்டசபை கூட்டத் தொடர், வரும் 20ல் துவங்கி, 29ம் தேதி வரை, தினமும் காலை, மாலை என, இரண்டு வேளை நடக்கும்,'' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
சட்டசபை கூட்டத் தொடர், வரும் 20ம் தேதி துவங்கும். அன்று முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் 15 பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி, சட்டசபை ஒத்தி வைக்கப்படும். மறுநாள் காலை 10:00 மணிக்கு சட்டசபை கூடும்.
சட்டசபை விதிகள் குழு கூட்டத்தில், காலை 10:00 மணிக்கு நடக்கும் சட்டசபையை, காலை 9:30 மணிக்கு துவக்க முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான தீர்மானம், 21ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்படும். அடுத்து 22ம் தேதி முதல் ஞாயிறு தவிர, மற்ற நாட்களில் தொடர்ந்து, 29ம் தேதி வரை கூட்டம் நடக்கும்.
காலை 9:30 மணிக்கு சட்டசபை துவங்கி, மதியம் 1:30 மணி வரை; பின்னர் மாலை 5:00 மணிக்கு துவங்கி இரவு 8:00 மணி வரை கூட்டம் நடக்கும். கடைசி நாள் 29ம் தேதி காலை மட்டும் கூட்டம் இருக்கும். மற்ற நாட்களில், காலை, மாலை என, 16 அமர்வுகளில் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு நடத்தப்படும்.
விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் காரணமாக, 24ம் தேதி துவங்க இருந்த சட்டசபை கூட்டத்தை, 20ம் தேதி துவக்குகிறோம். தினமும் கேள்வி நேரம் உண்டு.
காலை, மாலை கூட்டம் நடத்த, அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், அ.தி.மு.க., சார்பில் வேலுமணி, உதயகுமார்; பா.ஜ., சார்பில் நயினார் நாகேந்திரன் பங்கேற்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.