/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டிக்கு புதிய பாதை...! மாற்றுசாலை பணி 80 சதவீதம் நிறைவு ஊட்டிக்கு புதிய பாதை...! மாற்றுசாலை பணி 80 சதவீதம் நிறைவு
ஊட்டிக்கு புதிய பாதை...! மாற்றுசாலை பணி 80 சதவீதம் நிறைவு
ஊட்டிக்கு புதிய பாதை...! மாற்றுசாலை பணி 80 சதவீதம் நிறைவு
ஊட்டிக்கு புதிய பாதை...! மாற்றுசாலை பணி 80 சதவீதம் நிறைவு
UPDATED : ஜூன் 13, 2024 02:56 PM
ADDED : ஜூன் 13, 2024 05:46 AM

ஊட்டி : ஊட்டிக்கான மாற்றுச்சாலை பணி, 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதால், இரண்டாம் சீசனுக்குள் வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் ஆண்டு தோறும் ஏப்., மே மற்றும் செப்., மற்றும் அக்., மாதங்களில் சீசன் நடக்கிறது. சீசனுக்கு வெளி மாநில, வெளிமாவட்ட மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களான, வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் நாள்தோறும், 10 முதல் 15 ஆயிரம் வாகனங்கள் மலை பகுதிக்கு வந்து செல்கின்றன.
இதனால், ஊட்டி நகரில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா வாகனங்கள் சிக்குவதால் சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்க்க முடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.
மேலும், கேரளா, கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் மூன்று நாட்கள் ஊட்டியை சுற்றி பார்க்க திட்டம் வகுத்து வந்தாலும், ஒரே நாளில் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவர்கள் சுற்றுலா வாகனங்களில் அமர்ந்து பெரும்பாலான நேரம் வீணாகிறது.
அதிலும், மழை காலத்தில் ஊட்டி தலைகுந்தா பகுதி; கால்ப் பிளப் சாலையில் சுற்றுலா வாகனங்களை நிறுத்தி, அரசு இயக்கும் சுழற்சி பஸ்சில் சுற்றுலா மையங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால், பயண நேரம் வீணாகிறது. பஸ்சில் முதியவர்கள்; நோயாளிகள் செல்ல முடியாமல், அவர்கள் பஸ்சில் காத்து கிடக்கும் அவலம் தொடர்கிறது.
ஊட்டிக்கான மாற்றுபாதை
இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள், குன்னுாருக்கு செல்லாமல் நேரடியாக ஊட்டிக்கு செல்லும் வகையில், 40 கோடி ரூபாய் மதிப்பில், புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை, 20.5 கி.மீ., தொலைவு கொண்டதாகும்.
புதிதாக உருவாக்கப்படும் இந்த மாற்றுப்பாதையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் மலைப்பாதையில் வரும் வாகனங்கள், காட்டேரி, சேலாஸ், கெந்தளா, கேத்தி பாலாடா, கொல்லிமலை, காந்திபேட்டை வழியாக ஊட்டிக்கு செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த சாலை பணிகள் நிறைவடைந்தால், சமவெளியில் இருந்து பல வாகனங்கள் குன்னுார் செல்லாமல் ஊட்டிக்கு செல்ல முடியும். இதனால், பல இடங்களில் வாகன நெரிசலை தவிர்க்க முடியும். இப்பணிகளை விரைவில் முடித்து, இரண்டாம் சீசனுக்குள் சமவெளி வாகனங்களை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாலசந்திரன் கூறுகையில், ''குன்னுார் - ஊட்டி சாலையில் ஏற்படும் வாகன நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்ட புதிய மாற்றுச்சாலை பணி, 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
விரைவில் பயன்பாட்டுக்கு வரும். சமவெளியில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் காட்டேரி பகுதியில் இருந்து திருப்பி விடுவதால், இந்த சாலையில் ஊட்டிக்கு விரைவில் செல்ல முடியும்,'' என்றார்.