பட்டா கோரும் விண்ணப்பங்கள்; வருவாய் துறை செயலர் விளக்கம்
பட்டா கோரும் விண்ணப்பங்கள்; வருவாய் துறை செயலர் விளக்கம்
பட்டா கோரும் விண்ணப்பங்கள்; வருவாய் துறை செயலர் விளக்கம்
ADDED : ஜூன் 18, 2024 06:14 AM
சென்னை : 'உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களுக்கு, ஒரே வரிசை எண் வழங்கப்படவில்லை' என, வருவாய் துறை செயலர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.
பட்டா பெயர் மாற்றத்தை எளிமையாக்க, 'முதலில் வருவோருக்கு முதலில் சேவை' என்ற திட்டத்தை, வருவாய் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதில், நேரடி பட்டா மற்றும் உட்பிரிவு பட்டா ஆகிய இரண்டுக்கும் ஒரே தரவரிசை அளிக்கப்படுகிறது. இதனால், பட்டா பெயர் மாற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது என்ற புகார் எழுந்தது. இதுகுறித்து செய்தியும் வெளியானது.
இதுதொடர்பாக, வருவாய் துறை செயலர் ராஜாராமன் அளித்துள்ள விளக்கம்:
பட்டா மாற்றம் கோரும் மனுக்கள் இரண்டு வகைப்படும். ஒன்று உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்றம்; மற்றொன்று உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம். இரண்டு வகையான விண்ணப்பங்களுக்கும், தனித்தனியே வரிசை எண் வழங்கப்படுகிறது. அவற்றின் மீது உரிய கால அளவில் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில், இணைய வழியில், 81.76 லட்சம் பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு இச்சேவைகளை விரைந்து வழங்க வசதியாக, விண்ணப்பங்களை பெற்ற வரிசைப்படி தீர்வு செய்யும் நடைமுறை, இம்மாதம் 4ம் தேதி, உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களுக்கு அறிமுகமானது.
இந்த விண்ணப்பங்களில், 'முதலில் வருவோருக்கு முதலில் சேவை' என்ற முறையில், 4ம் தேதி முதல், 16ம் தேதி வரை, 15,484 பட்டா மாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்ற விண்ணப்பங்களில், 'முதலில் வருவோருக்கு முதலில் சேவை' என்ற நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இரண்டு வகையான விண்ணப்பங்களுக்கும் ஒரே வரிசை எண் வழங்கப்படவில்லை.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.