அண்ணாதுரையும் மும்மொழியின் தேவையைச் சென்னார்: தினகரன்
அண்ணாதுரையும் மும்மொழியின் தேவையைச் சென்னார்: தினகரன்
அண்ணாதுரையும் மும்மொழியின் தேவையைச் சென்னார்: தினகரன்
ADDED : மார் 13, 2025 11:08 PM
தஞ்சாவூர்:கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள, தஞ்சாவூர் வந்த அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அளித்த பேட்டி:
அ.கி. மூர்த்தி என்பவர், கடந்த 2004ம் ஆண்டில், 'அண்ணாதுரையின் நேர்கானல்' என்ற நுாலை தொகுத்துள்ளார். அதில், கடந்த 1964ம் ஆண்டு ஏப். 20ம் தேதி, அண்ணாதுரை, 'போஜனா' இதழுக்கு அளித்த பேட்டியில், ஒரு கட்சி ஆட்சி, இந்தியாவுக்கு ஏற்றதல்ல என்ற தலைப்பில் பேட்டி அளித்துள்ளார்.
இதில், தொடர்பு மொழி என்ற தலைப்பில், காலப்போக்கில் அனைத்து இந்தியாவுக்கும் ஒரு பொதுத்தொடர்பு மொழி உருவாக வேண்டும். அதுவரை, ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்க வேண்டும். 14 தேசிய மொழிகளுக்கும் சம மதிப்பு அளிக்கப்பட வேண்டும். தமிழ், ஆங்கிலம் என்பது முக்கியமானது என கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் சென்று வர, ஒரு தொடர்பு மொழி வேண்டும் என்பதை அண்ணாதுரை அன்றே உணர்ந்துள்ளார். அவர் ஒரு தீர்க்கதரிசி. அவர் இன்று இருந்து இருந்தால், உறுதியாக அந்த மூன்றாவது மொழியே இணைப்பு மொழியாக இருந்திருக்கும் என கூறியிருப்பார்.
அண்ணாதுரை, அந்த இணைப்பு மொழி ஹிந்தி என நேரடியாக கூறவில்லை.
நான் நிறைய ஊர்களுக்கு செல்கிறேன். அப்போது, 100 பேர் வரை சந்தித்து, மும்மொழி குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்டேன். 80 சதவீதம் பேர், மூன்றாவது மொழியை படிப்பதில் தவறில்லை என்றே கூறினார்.
அண்ணாதுரை பெயரை சொல்லி ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் தி.மு.க.,வினர், இனியாவது மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
எனக்கு ஆங்கிலம் தெரிந்தும், டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்லும்போது தடுமாற்றமாக இருக்கிறது. ஹிந்தி படித்திருந்தால், அந்த தடுமாற்றம் இருந்திருக்காது. அதனால், எல்லோரும் ஹிந்தி படிப்பதில் தவறில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.