Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்த அ.தி.மு.க., பிரமுகர் படுகொலை தி.மு.க., கவுன்சிலரின் கணவர் உட்பட 9 பேர் சிக்கினர்

கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்த அ.தி.மு.க., பிரமுகர் படுகொலை தி.மு.க., கவுன்சிலரின் கணவர் உட்பட 9 பேர் சிக்கினர்

கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்த அ.தி.மு.க., பிரமுகர் படுகொலை தி.மு.க., கவுன்சிலரின் கணவர் உட்பட 9 பேர் சிக்கினர்

கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்த அ.தி.மு.க., பிரமுகர் படுகொலை தி.மு.க., கவுன்சிலரின் கணவர் உட்பட 9 பேர் சிக்கினர்

ADDED : ஜூலை 05, 2024 01:20 AM


Google News
Latest Tamil News
சேலம்:சேலத்தில் ஒரு நம்பர் லாட்டரி, கஞ்சா விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விற்பனை செய்பவர்கள் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்த அ.தி.மு.க., பகுதி செயலர், கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில், தி.மு.க., கவுன்சிலரின் கணவர் உட்பட ஒன்பது பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் தாதகாப்பட்டி, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சண்முகம், 62; கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க., செயலராக இருந்தார்.

போராட்டம்


இதற்கு முன், மாநகராட்சியில் இருமுறை, கொண்டலாம்பட்டி மண்டலக் குழு தலைவர் பதவி வகித்துள்ளார். சமீப காலமாக ரியல் எஸ்டேட், மாநகராட்சியில் சாலை ஒப்பந்த வேலைகளை செய்து வந்தார்.

இவர‍து கட்சி ‍அலுவலகம், தாதகாப்பட்டியில் உள்ள அம்பாள் ஏரி சாலையில் உள்ளது. சண்முகத்துக்கு இரு மனைவியர். முதல் மனைவி பரமேஸ்வரி, 45, மகள் சுகன்யா, மகன் கவிசரண். இரண்டாவது மனைவி ராஜேஸ்வரி, 44, மகன் அபிநந்தன்.

நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, அலுவலகத்துக்குச் சென்று விட்டு, தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில், நான்காவது தெரு வழியாக சண்முகம் மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, மூன்று பைக்குகளில் வந்த கூலிப்படையினர், சண்முகத்தை மறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பினர்.

சண்முகம் குடும்பத்தினர், உறவினர்கள், அ.தி.மு.க.,வினர் ஆகியோர், கொலையாளிகள், அதற்கு மூளையாகச் செயல்பட்டவர்களை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.

மாநகர துணை போலீஸ் கமிஷனர் மதிவாணன், அன்னதானப்பட்டி போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர்.

நேற்று அதிகாலை 1:37 மணிக்கு சண்முகம் உடலை பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு, போலீசார் கொண்டு வந்தனர்.

உத்தரவு


இதுகுறித்து பரமேஸ்வரி அளித்த புகாரின்படி, அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, ஐந்து தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

துணை கமிஷனர் மதிவாணன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று காலை சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனைக்கூடம் முன், அ.தி.மு.க., அமைப்பு செயலர் செம்மலை, மாநகர மாவட்ட செயலர் வெங்கடாஜலம், எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், சண்முகம் குடும்பத்தினர் என, 100க்கும் மேற்பட்டோர்திரண்டனர். துணை கமிஷனர் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காலை, 10:30 மணிக்குள் சண்முகம் உடல் பிரேத பரிசோதனை முடிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், 'கொலைக்கு மூளையாக செயல்பட்ட, 55வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தனலட்சுமியின் கணவரான சதீஷ்குமாரை கைது செயயும்படியும், அவரை கைது செய்தால் தான் சண்முகம் உடலை வாங்குவோம்' என்றும், சண்முகம் குடும்பத்தினர் மற்றும் அ.தி.மு.க.,வினர் தெரிவித்து விட்டனர்.

சட்ட நடவடிக்கை


'துணைகமிஷனர் மதிவாணன், மதியம், 12:45 மணிக்கு,அ.தி.மு.க., மாவட்ட செயலர், எம்.எல்.ஏ., உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகளிடம் பேச்சு நடத்தினார்.அப்போது, 'சதீஷ்குமார் உட்பட ஒன்பது பேரை பிடித்து விசாரிக்கிறோம். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார். ஆனால், அ.தி.மு.க. நிர்வாகிகள், 'சதீஷ்குமாரை கைது செய்யாமல் சண்முகம் உடலை வாங்க மாட்டோம்' என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.

இதற்கிடையே, வாழப்பாடியில் சதீஷ்குமாரை போலீசார் சுற்றி வளைத்தனர். மேலும், கொலையில் தொடர்புடைய, கூலிப்படையாக செயல்பட்ட எட்டு பேரையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடம், ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாலை, 5:00 மணி வரை, சண்முகம் உடலை அவரது குடும்பத்தினர் வாங்கவில்லை.

பின்னணி என்ன?


போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் டிரஸ்டியின் தலைவராக சண்முகம் இருந்தார். அப்பொறுப்பின் பதவிக்காலம் முடிந்த நிலையில், மீண்டும் பொறுப்பு வகிப்பது தொடர்பாக, மூன்று மாதங்களுக்கு முன், சண்முகம், சதீஷ்குமார் இடையே தகராறு ஏற்பட்டது. சமீபத்தில், சாக்கடை கால்வாய் அமைப்பதிலும் தகராறு ஏற்பட்டது. சதீஷ்குமார், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார். அதற்கு சண்முகம் இடையூறாக இருந்தார். அதுபற்றி போலீசாருக்கும் தகவல் கொடுத்து உள்ளார்.

அதேபோல, மூணாங்கரட்டு பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், ஒரு நம்பர் லாட்டரி விற்ற கும்பலையும் சண்முகம் கண்டித்துள்ளார்; போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இப்பிரச்னைகளில் கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளது. திட்ட மிட்டு மூன்று நாட்களாக நோட்டமிட்டு சண்முகத்தை, கூலிப்படை கும்பல் கொலை செய்துள்ளது.

குறிப்பாக கொலை நடந்த பகுதியில், தெரு மின்விளக்குகள் அணைக்கப்பட்டு, சில 'சிசிடிவி' கேமராக்கள் உடைக்கப்பட்டுள்ளன. 100 மீட்டர் துாரம் சண்முகம் கடந்திருந்தால், வீட்டுக்கு

சென்றிருப்பார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலிட அழுத்தம்


சண்முகம் குடும்பத்தினர், அ.தி.மு.க.,வினர் தொடர் போராட்டத்தால் தான், தி.மு.க., கவுன்சிலரின் கணவரான சதீஷ்குமாரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆனால், கைது செய்ய போலீசார் தயக்கம் காட்டி வந்தனர். இதற்கு தி.மு.க., மேலிட அழுத்தமே காரணம் என, அ.தி.மு.க.,வினர் குற்றம் சாட்டியுள்ளனர்.ஆனால், அவரை கைது செய்யாமல், சண்முகம் உடலை வாங்க மாட்டோம் என, அ.தி.மு.க.,வினர் உறுதியாக உள்ளதால், போலீசார் தவித்து வருகின்றனர்.

கண்டனம்

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் அறிக்கை: சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதி செயலர் சண்முகம், நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை இழந்தது, மன வேதனையை அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் - - ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. தினசரி கொலை, கொள்ளை நடப்பது வாடிக்கையாக உள்ளது. இதை பலமுறை நான் கூறிய போதும், தி.மு.க., அரசு சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேற்று முன்தினம் இரவு 10:00 மணி அளவில், சண்முகம் தன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, கொலையாளிகள் அந்தப் பகுதி தெரு விளக்குகளை அணைத்து, அங்குள்ள

கண்காணிப்பு கேமராக்களை உடைத்து, திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்.

கொலைக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து, சட்டப்படி

நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறிஉள்ளார்.

பழனிசாமி அஞ்சலி


அ.தி.மு.க., பிரமுகர் சண்முகம் உடல், சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாலை அவரது உடலை பெற்றுக்கொள்ள, உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி மருத்துவமனைக்கு வந்து, சண்முகம் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்; அவரது உறவினர்களுக்கு

ஆறுதல் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us