கூட்டணி உடைவதற்கு அண்ணாமலையே காரணம் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி குற்றச்சாட்டு
கூட்டணி உடைவதற்கு அண்ணாமலையே காரணம் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி குற்றச்சாட்டு
கூட்டணி உடைவதற்கு அண்ணாமலையே காரணம் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 06, 2024 07:38 PM

கோவை:''கூட்டணி உடைவதற்கும், கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கும் அண்ணாமலை தான் காரணம்,'' என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறினார்.கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க., அதிக தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கம். கடந்த லோக்சபா தேர்தலில் 19.39 சதவீதம் ஓட்டு பெற்றது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 20.46 சதவீதம் ஓட்டுக்களை பெற்றுள்ளோம்.
தேர்தலில் வெற்றி தோல்வியை சகஜமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், பா.ஜ.,மாநில தலைவர் அண்ணாமலை அதிகமாகவே பேசியிருக்கிறார். இவர் மாநில தலைவரான பின்பு அண்ணாதுரையை பற்றி பேசினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றியும், தற்போதைய பொதுச்செயலர் பழனிசாமி குறித்தும் அவதுாறாக பேசினார்.
கூட்டணிக் கட்சியாக இருந்து கொண்டு அதன் தலைவர்களை பற்றி அவதுாறு பேசுவது நியாயமா என்பதை சிந்திக்க வேண்டும். அப்படி இல்லாமல், தான் பேசுவது சரிதான் என்று அதற்கு நியாயம் கற்பித்தார்.
கூட்டணி உடைவதற்கும் கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கும் அண்ணாமலையே காரணம்.இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி தொடர்ந்திருந்தால், தமிழகத்தில் 30 இடங்களை எளிதாக வென்றிருக்கலாம். அதைத் தவிர்த்து மீண்டும் எங்களை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. 2014ல் கோவையில் போட்டியிட்ட பா.ஜ.,வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கிய ஓட்டுக்களைவிட தற்போது அண்ணாமலை குறைவான ஓட்டுக்களை பெற்றிருக்கிறார்.
அ.தி.மு.க.,வின் தோல்வியை நாங்கள் படிப்பினையாக எடுத்துக் கொள்வோம். மீண்டும் புது உத்வேகத்தோடு மக்கள் பணியாற்றுவோம். தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். பெரிய அளவில் ஓட்டு வாங்கி விட்டதாகச் சொல்லும் அண்ணாமலை, முதலில் எங்களை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
2026ல் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் அ.தி.மு.க.,வெற்றி பெற்று பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம். அ.தி.மு.க.விற்கு சிறு சரிவு ஏற்பட்டாலும் அதன் பின், மிகப் பெரிய வெற்றியை பெறும்; அது தான் சரித்திரம்.
இவ்வாறு அவர் கூறினார்.