விஜயபாஸ்கர் ஜாமின் மனு விசாரணை 22க்கு ஒத்திவைப்பு
விஜயபாஸ்கர் ஜாமின் மனு விசாரணை 22க்கு ஒத்திவைப்பு
விஜயபாஸ்கர் ஜாமின் மனு விசாரணை 22க்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 18, 2024 10:06 PM
கரூர்:கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் பிரகாஷ், 50. இவரது மகள் ஷோபனா பெயரில், கரூர் அருகே குன்னம்பட்டி, தோரணகல்பட்டியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை, போலியான ஆவணங்கள் வாயிலாக யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், செல்வராஜ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் ஆகியோர் கிரையம் செய்து கொண்டதாக, கரூர், மேலக்கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர், ஜூன், 9ல் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலம், திருச்சூரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோரை சார் பதிவாளர் கொடுத்த புகார் அடிப்படையில் கடந்த, 16ல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்த நிலையில், ஜூலை, 31 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ஜாமின் கேட்டு விஜயபாஸ்கர், கரூர் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, எந்த ஆதாரமும் இல்லாமல் விஜயபாஸ்கர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார் என, அவரது தரப்பு வக்கீல்கள் வாதாடினர். இதற்கு ஆதாரம் உள்ளதாக, அரசு தரப்பு வக்கீல்கள் சார்பில் வாதம் வைக்கப்பட்டது.
ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் என எதிர்தரப்பு வக்கீல்கள் கேட்டனர். ஆதாரங்களை அளிப்பதற்கு கால அவகாசம் வேண்டும் என, அரசு வக்கீல் தரப்பு கேட்டுள்ளனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பரத்குமார், ஜூலை 22க்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.