Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ நல்ல தலைவர்கள் தேவை மாணவர்களை உசுப்பும் நடிகர் விஜய்

நல்ல தலைவர்கள் தேவை மாணவர்களை உசுப்பும் நடிகர் விஜய்

நல்ல தலைவர்கள் தேவை மாணவர்களை உசுப்பும் நடிகர் விஜய்

நல்ல தலைவர்கள் தேவை மாணவர்களை உசுப்பும் நடிகர் விஜய்

ADDED : ஜூன் 29, 2024 01:10 AM


Google News
Latest Tamil News
சென்னை:''தமிழகத்தில் போதைப் பொருட்களின் பயன்பாடு, இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து விட்டது,'' என, தமிழகவெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கல்வி விருது வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட விழா, சென்னை திருவான்மியூரில் நேற்று நடந்தது.

இவ்வாண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்டந்தோறும் முதலிடம் பெற்ற மாணவ - மாணவியருடன் விஜய் கலந்துரையாடினார்; புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஊக்கத்தொகை


நாங்குநேரியில் ஜாதி வன்முறையைக் கடந்து, பிளஸ் 2 தேர்வில் 469 மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற மாணவர் சின்னதுரையை விஜய் பாராட்டினார்; 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு விருது மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கினார்.

பின், மாணவர்கள் மத்தியில் விஜய் பேசியதாவது:

'பாசிட்டிவ் பவர்' இருப்பவர்களை பார்த்தால், ஒரு சக்தி கிடைக்கும்; இன்று எனக்கும் கிடைத்துள்ளது.

தமிழகத்தின் எதிர்காலம் மாணவ - மாணவியர் தான். வாழ்க்கையில் என்னவாக போகிறோம் என்கிற தெளிவான எண்ணம் சிலருக்கு இருக்கும். சிலருக்கோ வாழ்க்கையில் அடுத்து என்ன என்பதில் முடிவெடுப்பதில் சிரமம் இருக்கும்.

அப்படியானவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். எல்லா துறையும் நல்ல துறை தான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் முழுமனதோடு கடுமையாக உழைத்தால், வெற்றி உங்களை தேடி வரும்.

மாணவர்கள் தங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள். தமிழகத்தில் நல்ல டாக்டர்கள், இன்ஜினியர்கள் இருக்கின்றனர்.

தமிழகத்திற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவைப்படுகின்றனர். நான் தலைவர்கள் என சொன்னதும், அரசியல் தலைவர்களை மட்டும் சொல்லவில்லை. தமிழகத்தில் உலகத் தரத்திலான டாக்டர்கள், இன்ஜினியர்கள் அதிகமாகவே உள்ளனர்.

நமக்கு எது அதிகமாக தேவைப்படுகிறது என்றால், நல்ல தலைவர்கள் தான். அரசியல் ரீதியாக மட்டும் இதை சொல்லவில்லை.

ஒரு துறையில் சிறந்து விளங்கினால், அதன் தலைமையிடத்துக்கு நீங்கள் செல்ல முடியும். அதனால் தான், இன்னும் நல்ல தலைவர்கள் தேவை என்றேன்.

அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் அரசியலும் ஒரு தொழில் விருப்பமாக வர வேண்டும் என்பது என் எண்ணம். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.

உறுதிமொழி


செய்தி என்பது வேறு; கருத்து என்பது வேறு. எது உண்மை, எது பொய் என்பதை ஆராய கற்றுக் கொள்ளுங்கள். அப்போது தான், உண்மையில் நாட்டில் என்ன பிரச்னை, மக்களுக்கு என்ன பிரச்னை, சமூக தீமைகள் பற்றி தெரிய வரும்.

அதை தெரிந்து கொண்டால், ஒரு சில அரசியல் கட்சிகள் செய்கிற பொய் பிரசாரங்களை நம்பாமல், நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய நல்ல விசாலமான உலக பார்வையை, உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும்.

நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள். தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபடும் நண்பர்களை நல்வழிப்படுத்துங்கள். நீங்களும் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடாதீர்கள்.

சமீபத்தில் தமிழகத்தில் போதைப் பொருட்களின் பயன்பாடு, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது.

ஒரு பெற்றோராக, அரசியல் இயக்கத்தின் தலைவராக எனக்குமே அச்சமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை. தற்போது ஆளும் அரசு அதை தவற விட்டுவிட்டது என நான் பேச வரவில்லை; அதற்கான மேடையும் இது அல்ல.

சில நேரங்களில் அரசாங்கத்தை விட, நம் வாழ்க்கையை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்களை நல்வழியில் வைக்க முயலுங்கள். say no to temporary pleasure and say no to drugs என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us