விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட 17 மக்கள் மருந்தகம் மீது நடவடிக்கை
விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட 17 மக்கள் மருந்தகம் மீது நடவடிக்கை
விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட 17 மக்கள் மருந்தகம் மீது நடவடிக்கை
ADDED : மார் 12, 2025 05:40 AM
சென்னை,: விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட, 17 மக்கள் மருந்தகங்களிடம் விளக்கம் கேட்டு, மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
தமிழகத்தில், 1,100க்கும் மேற்பட்ட, பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன. இங்கு சந்தை விலையை காட்டிலும், குறைவான விலையில், மருந்து, மாத்திரைகள் விற்கப்படுகின்றன.
சில கடைகளில், முறையான ஆவணங்கள் பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில், ஆவணங்களை பராமரிக்காதது, டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து விற்றது என, விதிமீறலில் ஈடுபட்ட, 17 கடைகள் கண்டறியப்பட்டன.
இதுகுறித்து, மாநில மருந்து உரிம வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதர் கூறியதாவது:
மருந்து கடைகளில், டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மருந்து விற்கக்கூடாது. குறிப்பாக, சில முக்கிய மருந்துகளை விற்பது, சட்ட விரோத நடவடிக்கையாகும்.
அதன்படி, 17 மக்கள் மருந்தகங்களில், விதிகளுக்கு புறம்பாக மருந்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. அதில், எட்டு மருந்தகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மீதமுள்ள ஒன்பது மருந்தகங்களின் விதிமீறல்கள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.
மக்கள் மருந்தகங்களை இலக்காக வைத்து, நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களிடமிருந்து வரும் புகார்கள் அடிப்படையிலும், அதிகாரிகள் சோதனை அடிப்படையிலும், மருந்தகங்களில் ஆய்வு செய்யப்படுகிறது.
தரமான மருந்துகள், பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே, மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்தின் நோக்கம். வரும் காலங்களில், தற்போது துவக்கப்பட்ட, முதல்வர் மருந்தகங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.