மனைவிக்காக திருடி விட்டு, மன்னிப்பு கேட்ட ரொம்ப நல்ல திருடன்...!
மனைவிக்காக திருடி விட்டு, மன்னிப்பு கேட்ட ரொம்ப நல்ல திருடன்...!
மனைவிக்காக திருடி விட்டு, மன்னிப்பு கேட்ட ரொம்ப நல்ல திருடன்...!
UPDATED : ஜூலை 03, 2024 04:15 PM
ADDED : ஜூலை 03, 2024 01:00 PM

தூத்துக்குடி: தூத்துக்குடியில் திருடச் சென்ற இடத்தில் வீட்டின் உரிமையாளருக்கு மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து விட்டு, திருடன் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. 'என்னை மன்னித்து விடுங்கள். எனது மனைவிக்கு உடம்பு சரியில்லை. அதனால் தான் பணத்தை திருடிவிட்டேன்' எனக் கடிதத்தில் திருடன் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள மெஞ்ஞானபுரத்தை சேர்ந்த சித்திரை செல்வின் (வயது 79) ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவியும் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் மகனும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
சென்னையில் வசித்து வரும் இவரது மகனுக்கு குழந்தை பிறந்துள்ளதால், குழந்தையை பார்ப்பதற்காக கணவனும், மனைவியும் சென்னைக்கு சென்று இருந்தனர். வீட்டை சுத்தம் செய்ய வந்த, வேலைக்கார பெண் செல்வி வீட்டின் கதவுகள் உடைந்து இருப்பதை கண்டு, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில், 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், ஒன்றரை பவுன் எடை கொண்ட இரண்டு ஜோடி தங்க கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடன் திருடி சென்றது தெரியவந்தது. திருடன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
'என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் ஒரு மாதத்தில், பணத்தை திருப்பி தந்து விடுகிறேன். எனது மனைவிக்கு உடம்பு சரியில்லை. அதனால் தான் பணத்தை திருடிவிட்டேன்' எனக் கடிதத்தில் திருடன் குறிப்பிட்டுள்ளான். போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.