கூட்டுறவு கடையில் தக்காளி கிலோ ரூ.38க்கு விற்பனை
கூட்டுறவு கடையில் தக்காளி கிலோ ரூ.38க்கு விற்பனை
கூட்டுறவு கடையில் தக்காளி கிலோ ரூ.38க்கு விற்பனை
ADDED : ஜூலை 20, 2024 11:55 PM

சென்னை: மாநிலம் முழுதும், 63 பண்ணை பசுமை காய்கறி கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்தி வருகின்றன. சென்னையில், 20 கடைகள் செயல்படுகின்றன.
இந்த கடைகளில், வெங்காயம், கத்தரிக்காய், கேரட், உருளை உள்ளிட்ட காய்கறிகள், வெளிச்சந்தையை விட சற்று குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. தமிழகத்தில் தற்போது வெளிச்சந்தையில் கிலோ தக்காளி விலை, 60 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வால், ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கூட்டுறவு காய்கறி கடைகளில் கிலோ தக்காளி, 38 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் உள்ள கடைகளில் மட்டும் தினமும் சராசரியாக, 2 டன் தக்காளி விற்கப்படுகிறது. வியாபாரிகள் மொத்தமாக வாங்குவதை தடுக்க தலா ஒருவருக்கு, 2 கிலோ வழங்கப்படுகிறது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு வளாகத்தில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க காய்கறி கடை, பல்பொருள் அங்காடி, மருந்தகம் ஆகியவற்றில், கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.