'ஸ்டியரிங் லாக்' ஆனதால் மரத்தில் மோதிய அரசு பஸ்; 15 பேர் காயமடைந்தனர்
'ஸ்டியரிங் லாக்' ஆனதால் மரத்தில் மோதிய அரசு பஸ்; 15 பேர் காயமடைந்தனர்
'ஸ்டியரிங் லாக்' ஆனதால் மரத்தில் மோதிய அரசு பஸ்; 15 பேர் காயமடைந்தனர்
ADDED : ஜூன் 18, 2024 12:22 AM

தேவகோட்டை: அரசு பஸ்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அடிக்கடி பழுது, விபத்து ஏற்படுவது தொடர்கிறது. நேற்று சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அரசு பஸ் 'ஸ்டியரிங் 'திடீரென லாக் ஆனதால் மரத்தில் மோதியதில் டிரைவர், கண்டக்டர் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.
தேவகோட்டை போக்குவரத்து கழக கிளையை சேர்ந்த அரசு டவுன் பஸ் (3ஏ) ஆறாவயல் வழியாக தேவகோட்டை -- காரைக்குடி இடையே இயக்கப்படுகிறது. நேற்று மதியம் இந்த பஸ் காரைக்குடியில் இருந்து தேவகோட்டை நோக்கி 30 பயணிகளுடன் வந்தது. பஸ்சை ஜான் 48, ஓட்டினார்.
கண்டதேவி அருகே சிறுமருதுார் பகுதியில் வந்த போது பஸ்சின் 'ஸ்டியரிங் லாக்' ஆனதால், பஸ்சை திருப்ப முடியாமல் டிரைவர் திணறினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர மரத்தில் மோதி விபத்திற்கு உள்ளானது.
இதில் பஸ் டிரைவர், கண்டக்டர் கண்ணன் உட்பட 15 பேர் காயமடைந்தனர். கண்டக்டர், மேலசொம்பொன்மாரியை சேர்ந்த சுப்பம்மாள் ஆகிய இருவரையும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மாவிடுதிக்கோட்டையை சேர்ந்த 5 மாத கர்ப்பிணி தேவி 32, உட்பட 13 பேர் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆறாவயல் போலீசார் விசாரிக்கின்றனர்.