6 மாதத்தில் 42,486 பேர் காசநோயால் பாதிப்பு
6 மாதத்தில் 42,486 பேர் காசநோயால் பாதிப்பு
6 மாதத்தில் 42,486 பேர் காசநோயால் பாதிப்பு
ADDED : ஜூன் 18, 2024 04:46 AM
சென்னை : காசநோயை முழுமையாகக் கட்டுப்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும், 42,486 பேருக்குக் காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
காசநோயை, அடுத்த ஆண்டுக்குள் ஒழிக்கும் நோக்கில், மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன.
இதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, நோயாளிகளைக் கண்டறிவது, கூட்டுமருந்து சிகிச்சை அளிப்பது, தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
காசநோயாளிகளுக்கான சளி மாதிரிகளை, அவர்களின் வீட்டிற்கே சென்று எடுப்பதுடன், ஊடுகதிர் படம் எடுத்து சிகிச்சை அளிக்கவும், களப்பணியாளர்கள் வாயிலாக, அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று மருந்துகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், முதல்கட்டச் சிகிச்சையில், 84 சதவீதம் பேருக்கும், தொடர் சிகிச்சையில், மீதமுள்ளோருக்கும் காசநோய் குணமாவதாகச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு ஜனவரி முதல் இம்மாதம் வரை, நாடு முழுதும், 11.83 லட்சத்துக்கும் அதிகமானோரும், தமிழகத்தில், 42,486 பேரும், காசநோய் பாதிப்புடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக, மத்திய அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இதில், தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில், 13,913 பேரும், அரசு மருத்துவமனைகளில், 28,573 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்றுஉள்ளனர்.
இது, கடந்தாண்டை விட, 5 சதவீதம் அதிகம் என்பதால், அடுத்தாண்டுக்குள் முழு காசநோய் ஒழிப்புக்கான இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'காசநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
'இதற்கான சோதனையில், காசநோய் கண்டறியப்பட்டோருக்கு, தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் சோதனைகள், சிகிச்சைகளால், காசநோயைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்' என்றனர்.