ஆன்லைன் பண மோசடி வழக்கு சவுக்கு சங்கருக்கு 4 நாள் காவல்
ஆன்லைன் பண மோசடி வழக்கு சவுக்கு சங்கருக்கு 4 நாள் காவல்
ஆன்லைன் பண மோசடி வழக்கு சவுக்கு சங்கருக்கு 4 நாள் காவல்
ADDED : ஜூலை 09, 2024 08:12 PM
கரூர்:ஆன்லைன் மூலம் பணம் மோசடி தொடர்பான வழக்கில், யூ டியூபர் சவுக்கு சங்கரை நான்கு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, கரூர் ஜே.எம்.,-1 நீதிபதி உத்தரவிட்டார்.
கரூர், காந்தி கிராமம் இந்திரா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன், 45; கரூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரிடம், சென்னையை சேர்ந்த சவுக்கு சங்கர் மீடியா முன்னாள் ஊழியர் விக்னேஷ், 35, என்பவர் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.
அதை நம்பிய கிருஷ்ணன், 2023 அக்., 16ல், 7 லட்ச ரூபாயை, விக்னேஷிடம் கொடுத்துள்ளார். ஆனால், குறிப்பிட்ட காலத்தில் ஏழு லட்ச ரூபாயை, அதிக லாபத்துடன் விக்னேஷ் தரவில்லை. இதுகுறித்து கடந்த மாதம், 5ல் கரூர் வந்த விக்னேஷிடம், கிருஷ்ணன் கேட்டுள்ளார்.
அப்போது, ஆத்திரமடைந்த விக்னேஷ், கிருஷ்ணனை கல்லால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, கிருஷ்ணன் அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார், விக்னே ைஷ கைது செய்து விசாரித்தனர்.
அப்போது, கிருஷ்ணனிடம் வாங்கிய 7 லட்ச ரூபாயை, யூ டியூபர் சவுக்கு சங்கரிடம் கொடுத்து விட்டதாக, விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதையடுத்து சவுக்கு சங்கர் மீதும், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு, சென்னை புழல் சிறையில் இருந்த சவுக்கு சங்கரை கரூர் டவுன் போலீசார் கைது செய்து அழைத்து வந்து, கரூர் கிளை சிறையில் அடைத்தனர். நேற்று கரூர் ஜே.எம்., 1-நீதிமன்றத்தில், நீதிபதி பரத்குமார் முன் ஆஜர்ப்படுத்தினர்.
அப்போது, சவுக்கு சங்கரை ஏழு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, கரூர் டவுன் போலீசார் அனுமதி கேட்டனர்.
வழக்கை நீதிபதி பரத்குமார் விசாரித்து, சவுக்கு சங்கரை நான்கு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சவுக்கு சங்கரை கரூர் டவுன் போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் அழைத்து சென்றனர்.