ரூ.2,000 கோடி வராததால் கிடப்பில் 36,478 வீடுகள் திட்டம்
ரூ.2,000 கோடி வராததால் கிடப்பில் 36,478 வீடுகள் திட்டம்
ரூ.2,000 கோடி வராததால் கிடப்பில் 36,478 வீடுகள் திட்டம்
ADDED : ஜூன் 12, 2024 12:48 AM
சென்னை:தமிழகத்தில், அரசின் மானியத்தில், 78,476 வீடுகள் கட்டும் திட்டத்தில், 36,478 வீடுகள் கட்டும் பணி நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம், 3 நிலைகளில் செயல்படுத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், சொந்த நிலம் வைத்துள்ள மக்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில், தலா, 2.10 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.
தமிழகத்தில் இத்திட்டம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில், 12,489 கோடி ரூபாயில், 4.08 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது.
இதில், 2.78 லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன; 1.03 லட்சம் வீடுகளுக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இதே போன்று, ஏழை மக்கள் சொந்தமாக தனி வீடு கட்டிக்கொள்ள, மானியம் வழங்கும் திட்டத்தில், 2021 - 22ம் நிதி ஆண்டில், 78,476 வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதில், 9,412 வீடுகளுக்கான பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. மேலும், 32,586 வீடுகளுக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன; 36,478 வீடுகள் கட்டும் பணிகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நகர்ப்புற ஏழை மக்கள் தங்கள் சொந்த நிலத்தில் தனி வீடுகள் கட்டிக்கொள்ள, 2 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மத்திய அரசின் நிதி உதவி இருந்தாலும், இதில் பெரும் பகுதியை மாநில அரசு வழங்குகிறது.
இந்த வகையில், 2 திட்டங்களிலும் வீடுகள் கட்டும் பணிகளை விரைவுபடுத்த, 2023 - 24ம் நிதி ஆண்டில், 2,281 கோடி ரூபாய் வழங்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இருப்பினும், பல்வேறு கட்டங்களில் இந்த நிதி வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வரும் நிதி ஆண்டில், நிலுவை நிதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.