டூ - வீலர் பதிவுக்கு கூடுதல் கட்டணம் ரூ.20,000 இழப்பீடு தர உத்தரவு
டூ - வீலர் பதிவுக்கு கூடுதல் கட்டணம் ரூ.20,000 இழப்பீடு தர உத்தரவு
டூ - வீலர் பதிவுக்கு கூடுதல் கட்டணம் ரூ.20,000 இழப்பீடு தர உத்தரவு
ADDED : ஜூன் 04, 2024 12:55 AM
சென்னை: நுகர்வோர் நீதிமன்றத்தில், சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த ஜெ.செல்வராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு:
வேளச்சேரி நுாறு அடி சாலையில் உள்ள மானசரோவர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தில், 2022 டிசம்பர், 23ல் 'ஹோண்டா டியோ பிஎஸ் 6' மாடல் இரு சக்கர வாகனம் வாங்கினேன். அதற்காக, 87,000 ரூபாயை செலுத்தினேன். 2023 ஜனவரி, 2ல் வாகனத்தை டெலிவரி செய்யும் போது, கூடுதலாக 3,200 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு செலுத்த வேண்டும் என்று கூறி, 3,200 ரூபாயை கூடுதலாக வசூலித்துள்ளனர். இதுகுறித்து, சரியான விளக்கத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் அளிக்கவில்லை. மேலும், 'பேன்ஸி' எண் பெற, 2,000 ரூபாய் தனியாக செலுத்தி உள்ளேன்.
பிரசித்தி பெற்ற வாகன உற்பத்தி நிறுவனம், நியாயமற்ற, சட்ட விரோதமாக கூடுதல் பணம் வசூலித்தது ஏற்புடையது அல்ல. எனவே, கூடுதலாக வசூலித்த 3,200 ரூபாயை திருப்ப தருவதோடு, தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த விழுப்புரம் மாவட்ட குறைதீர் ஆணைய தலைவர் டி.சதீஷ்குமார், உறுப்பினர்கள் எஸ்.எம்.மீரா முகைதீன், கே.அமலா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம், இதுபோன்று நியாயமற்ற முறையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணித்திருக்க வேண்டும். வாடிக்கையாளர் தரப்பில் எழுப்பிய புகாருக்கும் உரிய பதில் அளிக்கவில்லை.
வாகன உற்பத்தி நிறுவனம், விற்பனை செய்த நிறுவனம் ஆகிய இருவரும் சேவை குறைபாடுடன் நடந்துள்ளது தெரிய வருகிறது. எனவே, இரு சக்கர வாகன பதிவுக்கு என, கூடுதலாக வசூலித்த 3,200 ரூபாயை மனுதாரருக்கு திருப்பி அளிக்க வேண்டும். சேவை குறைபாடு, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக, 20,000 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும்.
வழக்கு செலவாக, 10,000 ரூபாயையும் வழங்க வேண்டும். இதை, 45 நாட்களுக்குள் மனுதாரருக்கு செலுத்தவில்லை எனில், 9 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.