கிருஷ்ணகிரிக்கு கடத்தப்பட்ட 17 உடும்புகள் 3 பேர் கைது; 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரிக்கு கடத்தப்பட்ட 17 உடும்புகள் 3 பேர் கைது; 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரிக்கு கடத்தப்பட்ட 17 உடும்புகள் 3 பேர் கைது; 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
ADDED : ஜூன் 04, 2024 01:16 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தனியார் ஆம்னி பஸ்சில் கடத்தி வந்த, 17 உடும்புகளை கைப்பற்றிய வனத்துறையினர், மூன்று பேரை கைது செய்ததுடன், இரு ஆம்னி பஸ்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அடுத்த சிக்காரிமேட்டில் நரிக்குறவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இவர்கள் அருகிலுள்ள வனப்பகுதிகளில் விலங்குகளை வேட்டையாடி விற்று வருகின்றனர்.
குறிப்பாக, முயல், உடும்பு, காடை, கவுதாரிகளை வேட்டையாடுகின்றனர். அதை வார விடுமுறை நாட்களில், கிருஷ்ணகிரி மட்டுமின்றி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் பணிபுரியும் ஐ.டி., ஊழியர்களுக்காக, தங்கள் வீடுகளிலேயே சமைத்து வருமானம் பார்க்கின்றனர்.
மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்டையாடப்படும் உடும்பு உள்ளிட்ட விலங்குகளை, கிருஷ்ணகிரிக்கு ஆம்னி பஸ் வாயிலாக கடத்தி வந்து, அதிக விலைக்கு விற்பனை செய்வதாக, கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூரிலிருந்து பெங்களூரு செல்லும் ஆம்னி பஸ்சில், உடும்புகள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அன்றிரவு கிருஷ்ணகிரி அடுத்த சிக்காரிமேடு அருகே வந்த, இரு ஆம்னி பஸ்களை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், உயிருடன் 17 உடும்புகள் கடத்தியது தெரிந்தது.
விசாரணையில், ஆஸ்துமா உள்ளிட்ட உடல் பிரச்னைகளை தீர்க்கவும், மசாஜ் சிகிச்சைக்கு உடும்பு எண்ணெய் தயாரிக்கவும், உடும்புகள் கடத்தப்படுவதாகவும், இதற்காக புரோக்கர்கள் உள்ளதும், சிக்காரிமேட்டிலிருந்து பல இடங்களுக்கு விற்பனை செய்யப்படுவதும் தெரிந்தது.
இதையடுத்து, உடும்பு விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம், கார்த்தி, 25, கிருஷ்ணகிரி தேவா, 44, ராஜா, 48, உள்ளிட்ட மூவரை, வனத்துறையினர் நேற்று கைது செய்து, இரு ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்தனர்.