1,375 கால்நடை ஆய்வாளர் பணியிடம் காலி
1,375 கால்நடை ஆய்வாளர் பணியிடம் காலி
1,375 கால்நடை ஆய்வாளர் பணியிடம் காலி
ADDED : மார் 12, 2025 05:48 AM
கம்பம், : கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை உதவியாளர், கால்நடை ஆய்வாளர், உதவி மருத்துவர் பணியிடங்கள் உள்ளன. கால்நடை ஆய்வாளர் கிரேடு - 2 என நியமனம் செய்து, மருந்தகங்களில் பணிபுரிவர்.
பின் பதவி உயர்வு பெற்று கிரேடு - 1 என்ற பெயரில், கிராம கிளை நிலையங்களில் நியமிக்கப்படுவர். சினை பார்ப்பது, கால்நடைகளுக்கு ஏற்படும் சிறு சிறு நோய்களுக்கு மருந்து வழங்குவது இவர்களின் பணியாகும்.
தமிழகம் முழுதும் கிரேடு - 1 நிலையில் 1,397 பணியிடங்களும், கிரேடு - 2 நிலையில் 1,221 பணியிடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில், கிரேடு 1ல் 779, கிரேடு - 2ல் 464 பணியிடங்களில் பணியாளர்கள் உள்ளனர்.
இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம், 1,375 பணியிடங்கள் காலியாக உள்ளன. 50 சதவீதத்திற்கும் மேல் பணியிடங்கள் காலியாக உள்ளதால் சிகிச்சையளிப்பது மற்றும் இதர பணிகள் தேக்கமடைந்துள்ளன. 2011க்கு பின், 13 ஆண்டுகளாக பணி நியமனங்கள் செய்யப்படவில்லை.
இதனால், பெரும்பாலான கிளை நிலையங்கள் பூட்டியுள்ளன. கிராமங்களில் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை.
கால்நடை பராமரிப்பு துறையினர் கூறுகையில், 'முன்னர் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் நியமனங்கள் நடந்தன. தற்போது டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடைபெறுவதால் தான், கால தாமதம் என அதிகாரிகள் கூறுகின்றனர்' என, புலம்பினர்.