கைகொடுக்கும் மத்திய அரசு 12 லட்சம் டன் நிலக்கரி இருப்பு
கைகொடுக்கும் மத்திய அரசு 12 லட்சம் டன் நிலக்கரி இருப்பு
கைகொடுக்கும் மத்திய அரசு 12 லட்சம் டன் நிலக்கரி இருப்பு
UPDATED : ஜூன் 15, 2024 04:55 AM
ADDED : ஜூன் 15, 2024 02:23 AM

சென்னை:மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தினமும் போதிய அளவுக்கு நிலக்கரி அனுப்பப்படுகிறது. இதனால், தற்போதைய நிலவரப்படி, 15 நாட்களுக்கு தேவையான, 12 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது.
துாத்துக்குடி, திருவள்ளூர், சேலம் மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு, 4320 மெகாவாட் திறனில் ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் தினமும் முழு மின் உற்பத்திக்கு, 72,000 டன் நிலக்கரி தேவை.
திருவள்ளூர் அருகே அத்திப்பட்டில், 800 மெகா வாட் திறனில், 'வட சென்னை 3' அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு சமீபத்தில் தான் மின் உற்பத்தி துவங்கியது. இன்னும் முழு அளவு மின் உற்பத்தி செய்யப்படாததால், தினமும், 10,000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது.
தமிழகத்திற்கான நிலக்கரி, ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி.வேலி போன்ற மத்திய அரசின் சுரங்கங்களில் இருந்து தினமும் அனுப்பப்படுகிறது. போதிய சரக்கு ரயில் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால், ஒதுக்கிய நிலக்கரி முழுதுமாக அனுப்பப்படுவதில்லை. இதனால், பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.
கடந்த ஏப்., மே மாதங்களில் மின் தேவை அதிகரித்ததால், அனல் மின் நிலையங்களில், 4500 மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால், நிலக்கரி வேகமாக காலியாகி, ஏழு நாட்களுக்கு தேவையான நிலக்கரி தான் கையிருப்பில் வைக்கப்பட்டு வந்தது. கடந்த மே முதல் சீசன் துவங்கியதால் காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக, 2500 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து பகலில், 4000 மெகா வாட் கிடைக்கிறது. மழையால் மின் தேவை குறைந்துள்ளது. இதனால், நிலக்கரியை மிச்சப்படுத்த அனல் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய தொகுப்பில் இருந்து தினமும், 50,000 டன்னுக்கு குறைவாக வந்த நிலையில், தற்போது, 55,000 டன் வரை நிலக்கரி வருகிறது. இதையடுத்து, மின் வாரியத்திடம், 15 நாட்களுக்கு தேவையான, 12 லட்சம் டன் நிலக்கரி இருப்பு உள்ளது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.