குப்பைக்கு போன 1,000 மனுக்கள்; பி.ஏ., மூலம் 'டீல்' பேசும் அமைச்சர்கள்
குப்பைக்கு போன 1,000 மனுக்கள்; பி.ஏ., மூலம் 'டீல்' பேசும் அமைச்சர்கள்
குப்பைக்கு போன 1,000 மனுக்கள்; பி.ஏ., மூலம் 'டீல்' பேசும் அமைச்சர்கள்
ADDED : ஜூன் 15, 2024 05:07 AM

சேலம்: 'எம்.எல்.ஏ.,க்களது குறைந்தபட்ச உரிமையை, மரியாதையை காப்போம்' என, சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள், அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் ஆறு பக்கக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
மக்களது பொதுவான கோரிக்கைகளை சட்டசபை கேள்விகளாக, 20,000த்துக்கும் மேல் கொடுத்துள்ளேன். இதையே நீங்களும், உங்கள் பாணியில் சிறப்பாக செய்து இருப்பீர்கள்.
நான் எழுதும் கீழ்க்கண்ட கருத்துகள், அனைவரையும் அரவணைத்து பாராட்டும்படி செயல்படும் நான்கு அமைச்சர்கள் தவிர்த்து, மீதம் உள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் பொருந்தும்.
மக்களது கோரிக்கைகள், அவர்களில் சிலரது தனிப்பட்ட தேவைகளுக்காக, அமைச்சர்களை நேரில் சந்திக்கிறோம். 'காபி சாப்பிட்டியா? என்னோடு நீ டிபன் சாப்பிட்டே ஆக வேண்டும்' என, அன்பொழுக பேசி சாப்பிட்டு முடித்து, அண்ணா ஒரு வேலை என்றால்... 'கொடு... ஏ... பி.ஏ., இத உடனே செய்து கொடு' எனும்போது, நமது காதில் தேன் பாயும் மகிழ்ச்சி.
நான் கொடுத்த ஏதும் இதுநாள் வரை நடக்கவில்லை. உங்களுக்கு ஏதாவது நடந்ததா என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.
சில அமைச்சர்களிடம், நாம் தனிப்பட்ட முறையில் கொடுக்கும் பரிந்துரைக்கு நேரடியாக யாருக்காக பரிந்துரைக்கிறோமோ, அவர்களிடமே அமைச்சர்களது உதவியாளர்கள் மூலம் பேசி, 'டீல்' செய்து, எம்.எல்.ஏ.,வான நம்மை அவமானப்படுத்திய நிகழ்வு, மதுரையைச் சேர்ந்த பத்திரமானவர் உள்ளிட்ட பலரால் எனக்கு ஏற்பட்டது.
இன்னும் சில அமைச்சர்கள், நாம் கொடுக்கும் மனுவை தொட்டாலோ, படித்தாலோ தீட்டு என்பதுபோல பாவிக்கும் விதம்... பாடம் சொல்லும் அமைச்சர் உள்ளிட்ட சிலரிடம் எனக்கு ஏற்பட்டது.
இதுவரை என் தொகுதி சார்ந்தும், மக்களின் தனிப்பட்ட பிரச்னைகள், தேவைக்களுக்காகவும், 1,000க்கும் மேற்பட்ட மனுக்களை, அமைச்சர்களிடம் நேரில் கொடுத்துள்ளேன். இதன் அனைத்து நகல்களும் என்னிடம் உள்ளன.
அதில், 9 கோரிக்கைகள் நிறைவேறி, மீதமுள்ள மனுக்கள் குப்பைக்கு போய் விட்டனவா அல்லது தனிப்பட்ட டீலுக்காக காத்திருக்கிறதா என்பது அமைச்சர்களுக்கே வெளிச்சம். போட்டி போட்டு, 12 முதல், 18 வரை வாங்குறாங்க. குறைத்துக் கொள்ளுங்கண்ணா என்றால், மேல கை காட்டுறாங்க.
இவைகளை எல்லாம் ஏன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்றால், உங்கள் மாவட்ட அமைச்சர், உங்களுக்கு நெருக்கமானவராக இருக்கலாம். அவரும் நம்மைப்போல, எம்.எல்.ஏ.,வாகி பின்னரே அமைச்சரானார் என, அவரிடம் எடுத்துச் சொல்லுங்கள். இன்றைய அமைச்சர் நாளையே வெறும் எம்.எல்.ஏ., ஆகலாம். அவருக்கும் நம் நிலை ஏற்படக் கூடாது என, எடுத்துச் சொல்லுங்கள்.
அமைச்சர்கள், நமக்கு தரும் மரியாதை இதுதான் என்றால், அதிகாரிகள் தரும் மரியாதை மிக சிறப்பு. நல்ல பல அதிகாரிகளுக்கு மத்தியில், சிலரே நம்மை சந்திக்க மறுக்கிறார்கள். இதுதான் இன்றைய மக்களாட்சி.
நமக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு, 5 ஆண்டுகளில் ஏதேனும் செய்து கொடுத்தால் தானே மீண்டும் அவர்களது முகத்தில் விழிக்க முடியும்.
தேர்தலில் நாம் செய்த செலவுகள், அதனால் நமக்கு ஏற்பட்ட கடன்கள் குறித்து, இங்கு நான் ஏதும் குறிப்பிட விரும்பவில்லை.
என் மனதில் இருக்கும், இதுபோன்று இன்னும் பல வேதனைகளை பெரும்பாலான உங்களுக்கும் இருக்கும் என்பதை நான் அறிவேன். அப்படி இல்லை என்றால், நீங்கள் ஆளுங் கட்சி மாவட்ட செயலராக இருப்பீர்கள்.
இந்த கூட்டத் தொடரில் பாகுபாடின்றி அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் முதல்வரிடம் முறையிட்டு, நமக்கு அமைச்சர்களால் ஏற்படும் புறக்கணிப்புகளையும், அவமானங்களையும் எடுத்துரையுங்கள்.
நேரில் சொல்ல முடியாவிட்டால், முதல்வருக்கு கடிதமாவது கொடுங்கள். 234 எம்.எல்.ஏ.,க்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே என்பதை, அமைச்சர்களுக்கு, முதல்வர் மூலமாக உணர்த்துவோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கடிதம் குறித்து எம்.எல்.ஏ. அருளிடம் கேட்டபோது, ''எம்.எல்.ஏ.க்களை, தி.மு.க. அரசு, அமைச்சர்கள் எல்லாரும் கேவலப்படுத்துகின்றனர். உரிமைகளை புறக்கணிப்பதால் மரியாதை வேண்டும் என்பதற்காக, இதை மனக்குமுறலாக, கடிதமாக எழுதி அனுப்பியுள்ளேன்,'' என்றார்.