Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவைக்கு இழைக்கும் அநீதியை மறைக்க முப்பெரும் விழா

கோவைக்கு இழைக்கும் அநீதியை மறைக்க முப்பெரும் விழா

கோவைக்கு இழைக்கும் அநீதியை மறைக்க முப்பெரும் விழா

கோவைக்கு இழைக்கும் அநீதியை மறைக்க முப்பெரும் விழா

ADDED : ஜூன் 15, 2024 05:20 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கோவை : கோவைக்கு இழைத்துக் கொண்டிருக்கும் அநீதியை மறைக்க, தி.மு.க., முப்பெரும் விழா கொண்டாடுவதாக, பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது:


வெள்ளலூர் குப்பை கிடங்கு, அப்பகுதி மக்களின் வாழ்வை பாதித்ததால், அதை அகற்றக் கோரி, பசுமைத் தீர்ப்பாயத்தில், 2013ல் வழக்கு தொடரப்பட்டது.

ஓராண்டுக்குள் வெள்ள லுார் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றி, 4 மாதங்களில், 65 குப்பை சுத்திகரிப்பு மையங்களை உருவாக்க, பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 2018ல் உத்தரவிட்டது.

ஆறு ஆண்டுகளாகியும், அவலம் தொடர்கிறது. 2019 லோக்சபா தேர்தல் வாக்குறுதியில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உத்தரவாதம் அளித்து, தி.மு.க., வெற்றி பெற்றது.

2021 சட்டசபைத் தேர்தலிலும் வாக்குறுதி அளித்தது. போகிற போக்கில் அள்ளிவிடுவதுதானே, தி.மு.க.,வின் வழக்கம்.

யார் கேட்கப் போகிறார்கள் என்ற, அதீத நம்பிக்கையில் மீண்டும் 2024 லோக்சபா தேர்தலில், கோவைக்கு தனியாக ஒரு தேர்தல் அறிக்கையை தி.மு.க., வெளியிட்டது.

அதற்கு தலைப்பே, 'ரைசிங் கோவை'. இந்த 49 பக்க அறிக்கையில், 39 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அனைத்துமே, புதிய மொந்தையில் பழைய கள்ளு கதைதான்.

மாநில சுயாட்சியும், ஹிந்தி எதிர்ப்பும் எப்படி இன்னும் தொடர்கிறதோ, அதேபோல, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு உட்பட, 39 வாக்குறுதிகளும் மூன்றாண்டு கால ஆட்சியில் இன்னும் தொடர்கின்றன.

சாலைகள் சீர்படுத்தப்படவில்லை. இணைப்புச் சாலைகள் எனப் போடப்பட்டவை, இன்னும் துண்டித்தே கிடக்கின்றன. பார்த்தால் தலைசுற்றி மயக்கம் வரும் அளவுக்கு, 39 வாக்குறுதிகளில் கோவையின் வளர்ச்சி சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால், எப்போதும் போல, மக்களை முட்டாளாக நினைக்கும் தி.மு.க., வாக்குறுதி களை நிறைவேற்றுவதற்கான எந்த காலக்கெடுவும் கொடுக்க வில்லை.

'செய்வோம்', 'முடிப்போம்', என, முடிவில்லாத சொற்களையே பயன் படுத்தி இருக்கிறது.

இப்படி, கோவைக்கு இழைத்துக் கொண்டிருக்கும் அநீதியை மறைக்க, தி.மு.க., முப்பெரும் விழா கொண்டாடுகிறது. மீண்டும் எத்தனை பொய் சொல்லப் போகிறார்கள் எனப் பார்ப்போம்.

ஆனால், கோவையில் ஒரு சென்டிமென்ட் தி.மு.க.,வுக்கு உண்டு. 2010ல், உண்மையான உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணித்து, இவர்களாக ஒன்று போட்டார்கள். அதுதான் தி.மு.க.,வுக்கு கடைசி மாநாடு.

பத்து ஆண்டுகளுக்கு, தலைமைச் செயலகம் பக்கமே செல்ல முடியாமல் போய்விட்டது. இப்போதும் ஒரு மாநாடு போடுகிறார்கள்.

2026ல் அப்படி ஆக வேண்டும் என நினைக்கிறார்கள் போல். அது தமிழகத்துக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லதுதானே.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us