/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சேதமடைந்த தரைப்பாலத்தில் ஓடும் தண்ணீர்சேதமடைந்த தரைப்பாலத்தில் ஓடும் தண்ணீர்
சேதமடைந்த தரைப்பாலத்தில் ஓடும் தண்ணீர்
சேதமடைந்த தரைப்பாலத்தில் ஓடும் தண்ணீர்
சேதமடைந்த தரைப்பாலத்தில் ஓடும் தண்ணீர்
ADDED : ஜன 07, 2024 04:07 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் ஆலங்குளத்தில் இருந்து வளையப்பட்டி செல்லும் ரோட்டில் சேதம் அடைந்துள்ள தரைப்பாலத்தால் 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஆலங்குளத்தில் இருந்து வளையப்பட்டி செல்லும் ரோட்டில் வெம்பக்கோட்டை செல்லும் ஓடையில் குறுக்கே தரைப் பாலம் உள்ளது. இதன் வழியாகத்தான் அம்மையார்பட்டி, லட்சுமியாபுரம், செவல்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட நகரங்களுக்கு இந்த தரைப்பாலத்தை கடந்து தான் வர வேண்டும்.
இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த தரைப்பாலம் தற்போது முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. பாலம் முழுவதுமே குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படும் நிலையில் மழைக்காலங்களில் பாலத்தின் மீது தண்ணீர் சென்றால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகின்றது.
சமீபத்தில் பெய்த மழையில் சேதம் அடைந்த பாலத்தின் மீது தண்ணீர் சென்றதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தற்போதும் பாலத்தில் தண்ணீர் செல்கின்ற நிலையில் வேறு வழியின்றி வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சிரமத்துடனே வருகின்றனர்.
தவிர டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுகின்றனர். எனவே இங்கு சேதம் அடைந்த தரைப்பாலத்தை அகற்றி புதிதாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.