ADDED : பிப் 25, 2024 06:24 AM

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் நகராட்சி மூலம் கட்டப்பட்ட மினி பஸ் ஸ்டாண்ட்டில் வசதிகள் இருந்தும், அவை பயணிகளின் பயன்பாட்டிற்கு வரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு குழுமம் மூலம் 90 லட்சம் ரூபாய் நிதியில் காந்தி நகர் பகுதியில் புதிய மினி பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. பயணிகள் இருக்கை, மின்விளக்கு வசதி, ஆண் பெண்கள் கழிப்பறை, போலீசார் கண்காணிப்பு அறை உட்பட வசதிகள் செய்யப்பட்டது.
2019 ல், மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. வந்த சில மாதங்களிலேயே கழிப்பறைகள் பராமரிப்பு இன்றி மூடப்பட்டது. முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. இரவு நேரங்களில் குடிமகன்களின் பாராக செயல்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் பயணிகள் உள்ளே வர தயங்குகின்றனர். பஸ்கள் உள்ளே நுழையும் பகுதி கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியில் நீட்டி, பஸ்களின் டயர்களை பதம் பார்க்கிறது. இதனால், பஸ்கள் உள்ளே வர பயப்படுகின்றனர். பயணிகளும் பஸ் ஸ்டாண்டிற்கு வெளியில் நின்று தான் பஸ்கள் ஏற வேண்டியுள்ளது.
பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் மினி பஸ் ஸ்டாண்டில் கழிப்பறைகளை பராமரித்து செயல்பட நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.