/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சிவகாசி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மேம்பாட்டு குழுவினர் ஆய்வு கூட்டம்சிவகாசி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மேம்பாட்டு குழுவினர் ஆய்வு கூட்டம்
சிவகாசி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மேம்பாட்டு குழுவினர் ஆய்வு கூட்டம்
சிவகாசி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மேம்பாட்டு குழுவினர் ஆய்வு கூட்டம்
சிவகாசி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மேம்பாட்டு குழுவினர் ஆய்வு கூட்டம்
ADDED : ஜன 13, 2024 05:02 AM

சிவகாசி தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையில் (இ.எஸ்.ஐ.,) மருத்துவமனை மேம்பாட்டு குழுவினர் ஆய்வு கூட்டம் நடந்தது.
சிவகாசி இ.எஸ்.ஐ., மருத்துவமனை 1987 அக்.10ல் 50 படுக்கை வசதியுடன் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 2000ல் 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு ஒரு லட்சத்து 93 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தினமும் 120 பேர் வரை வெளி நோயாளிகளாகவும் 50 பேர் வரை உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது மருத்துவ சேவை, பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு அறுவை சிகிச்சை, குடும்பநல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை சிறப்பு மருத்துவம் ஆகியவை சிறப்பு டாக்டர்களால் வழங்கப்பட்டு வருகிறது. சித்தா, ஆயுர்வேத மருத்துவ வசதியும் உள்ளது.
மேலும் உயர்ரக ரத்தப் பரிசோதனை கருவிகள், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி, அல்ட்ரா சோனோகிராம், இ.சி.ஜி., லேப்ராஸ்கோப்பி உள்ளன. மாரடைப்பு வந்தால் அதற்கு உடனடியாக போட வேண்டிய மருந்து உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது.
ஆனாலும் இங்கு கட்டடம் சேதம், செயல்படாத லிப்ட், டாக்டர்கள் பற்றாக்குறை, உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மருத்துவமனை தள்ளாடியது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மருத்துவமனையில் மேம்பாட்டு குழுவினர் ஆய்வு, ஆலோசனை கூட்டம் நடந்தது.
மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் தலைமை வகித்தார். மேம்பாட்டுக்குழு உறுப்பினர்கள் இ.எஸ்.ஐ., மருத்துவமனை காப்பீட்டுக் கழக மேலாளர் கிரண் நிவாஸ், காமராஜ், சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதில் புதிய கட்டடங்கள், உபகரணங்கள், அதிகப்படியான பணியாளர்கள் தேவை குறித்து தலைமை அலுவலகத்திற்கு கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்காதது குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மருத்துவமனையின் தேவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் கூறுகையில், நோயாளிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேம்பாட்டு குழுவினர் ஆய்வு செய்து மருத்துவமனையின் தேவைகள் குறித்து ஆலோசனை செய்துள்ளனர்.
லிப்ட், கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.