ADDED : செப் 12, 2025 04:13 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நேற்று மாலை பெய்த கனமழையால் ரோடுகளில் கழிவு நீருடன் மழைநீர் கலந்து வெள்ளக் காடானது.
அருப்புக்கோட்டையில் 3 நாட்களாக வெளுத்துக் கட்டிய வெயிலில் அவதிப்பட்ட மக்களை நேற்று மாலையில் கன மழை பெய்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பள்ளி கல்லூரி விடும் நேரத்தில் பெய்த மழையால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். ரோடுகள், தெருக்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள், குடிநீர் திட்ட பணிகள் நடப்பதால் ஆங்காங்கு தோண்டப்பட்ட நிலையில் மழையும், கழிவு நீரும் கலந்து பல பகுதிகள் வெள்ளக் காடாக ஆனது.
பூக்கடை பஜாரில் வழக்கம் போல் வெள்ளம் தேங்கி கடைகளுக்குள் புகுந்தது. காந்தி நகர் சந்திப்பில் மழை நீர் வெளியேற வழி இன்றி ரோடுகளில் தேங்கியது. மதுரை ரோடு தற்காலிக மழை வெள்ளத்தால் சேறும், சகதியும் ஆனது.