/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிவகாசி மாநகராட்சியில் மீண்டும் பாலிதீன் பயன்பாடு அதிகரிப்பு சிவகாசி மாநகராட்சியில் மீண்டும் பாலிதீன் பயன்பாடு அதிகரிப்பு
சிவகாசி மாநகராட்சியில் மீண்டும் பாலிதீன் பயன்பாடு அதிகரிப்பு
சிவகாசி மாநகராட்சியில் மீண்டும் பாலிதீன் பயன்பாடு அதிகரிப்பு
சிவகாசி மாநகராட்சியில் மீண்டும் பாலிதீன் பயன்பாடு அதிகரிப்பு
ADDED : ஜூன் 15, 2025 05:41 AM
சிவகாசி, : சிவகாசி மாநகராட்சியில் மீண்டும் பாலிதீன் பயன்பாடு அதிகரித்து விட்டதால் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அன்றாட வாழ்க்கையில் பாலிதீன் பைகள் அதிக அளவில் மக்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என 2019 ஜன. 1 முதல் தமிழகம் முழுவதும் பாலிதீன் பொருட்களுக்கு அரசு தடை விதித்தது.
அதனைத் தொடர்ந்து பாலிதீன் பயன்பாடு குறைந்தது. கடைக்கு செல்லும் மக்கள் ஓரளவிற்கு மஞ்சப்பை உள்ளிட்டவை எடுத்துச் செல்ல பழகி இருந்தனர்.
ஆனாலும் சிவகாசி மாநகராட்சியில் பாலிதீன் பொருட்களின் பயன்பாடு நின்ற பாடு இல்லை. நகர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் கொட்டப்படும் கழிவுகளில் 50 முதல் 80 சதவீதம் பாலிதீன் பொருட்கள் உள்ளது. அந்த அளவிற்கு பாலிதீன் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது.
சிவகாசி வேலாயுதம் ரஸ்தா ரோடு, பஸ் ஸ்டாண்ட் ரோடு, பழைய விருதுநகர் ரோடு, விளாம்பட்டி ரோடு நாரணாபுரம் ரோடு, சாத்துார் ரோடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் குப்பையோடு தடை பாலித்தீன் பைகளும் கொட்டப்படுகிறது. தவிர தண்ணீர் செல்லும் ஓடைகள், கண்மாய்களிலும் இவை கொட்டப்படுகின்றன.
இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரத் கேடும் ஏற்படுகிறது. மாநகராட்சி சார்பில் அவ்வப்போது அகற்றினாலும் மீண்டும் மீண்டும் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்கிறது. இந்த பாலிதீன் பொருட்களை மாடு உள்ளிட்ட கால்நடைகள் தங்களது தீவனமாக கருதி சாப்பிடுகின்றன.
மேலும் சிறிய மழை பெய்தாலும் ரோட்டில் உள்ள பாலிதீன் பைகளில் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தி ஆகிறது. மாநகராட்சி சுகாதாரத்துறையினர் சோதனை நடத்தி அபராதம் விதித்தாலும் பயன்பாடு குறையவில்லை.
எனவே பெரிய கடைகள், மொத்த விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.