/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ரயில்வே ஸ்டேஷன்களில் வளர்ச்சி பணிகளுக்கு எதிர்பார்ப்புரயில்வே ஸ்டேஷன்களில் வளர்ச்சி பணிகளுக்கு எதிர்பார்ப்பு
ரயில்வே ஸ்டேஷன்களில் வளர்ச்சி பணிகளுக்கு எதிர்பார்ப்பு
ரயில்வே ஸ்டேஷன்களில் வளர்ச்சி பணிகளுக்கு எதிர்பார்ப்பு
ரயில்வே ஸ்டேஷன்களில் வளர்ச்சி பணிகளுக்கு எதிர்பார்ப்பு
UPDATED : மே 11, 2025 07:36 AM
ADDED : மே 11, 2025 05:38 AM

நாட்டில் அதிக வருவாய், பாரம்பரிய நகரங்கள், முக்கிய வழித்தடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு ரயில்வே கோட்டத்திற்கு 15 ரயில்வே ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டு தேவையான அனைத்து வசதிகளும் செய்ய 2023ல் அம்ரித் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
அதன்படி மதுரை ரயில்வே கோட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், விருதுநகர், பழநி, பரமக்குடி, காரைக்குடி, திருச்செந்துார், அம்பாசமுத்திரம், தென்காசி உட்பட 15 ரயில்வே ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது ஸ்டேஷன்கள் நவீனமயமாகி வருகிறது.
இத்திட்டத்தின் படி விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன்களில் லிப்ட், டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள், நடைமேடை உயரப்படுத்துதல், நடை மேம்பாலம் அமைத்தல், நிழற்குடைகள், பயணியர் இருக்கை வசதிகள், வெயிட்டிங் கால், மின்விளக்குகள், வாகன காப்பகம் உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதே போல் சிவகாசி, சாத்துார், அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் களிலும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் அனைத்து வசதிகளும் செய்து தருவது காலத்தின் கட்டாயமாகும். விருதுநகர்- மானாமதுரை வழித்தடம் அகல ரயில் பாதையாக்கி பல ஆண்டுகளான நிலையில் இன்னும் அந்த வழித்தடத்தில் போதிய ரயில்கள் இயக்கப்படாததால் அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் எந்தவித அடிப்படை வசதியும் இன்றி அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதேபோல் மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்டிற்கு மிக அருகில் அமைந்துள்ள சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் மூலம் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் மக்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு மூன்றாவது நடைமேடையில் நிழற்குடை வசதி இல்லை. போதிய மின்விளக்குகள் இல்லாமல் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது.
மாவட்டத்தின் மிகப்பெரும் தொழில் நகரான சிவகாசியில் தினமும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அங்கும் அனைத்து வசதிகளும் செய்து நவீன மயமாக்க வேண்டும். இதற்கு விருதுநகர் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் முதலில் ரயில்வே ஸ்டேஷன்களை முழுமையாக நேரடி ஆய்வு செய்ய வேண்டும். ரயில்வே வளர்ச்சித் திட்டங்களை பொருத்தவரை கேரளா எம்.பி.க்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
அதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் விடுபட்டுள்ள சிவகாசி, சாத்துார், அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் களிலும் இரண்டாம் கட்ட அம்ரித் பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த விருதுநகர் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.