/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நிறைவுமாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு
மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு
மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு
மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு
ADDED : ஜன 29, 2024 04:59 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் அணைகள், கண்மாய்கள், குளங்கள் உட்பட 26 இடங்களில் நடந்த நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று நிறைவடைந்தது.
தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு பணி ஜன. 27, 28 லும், நில பறவைகள் கணக்கெடுப்பு பணி மார்ச் 2, 3 தேதிகளிலும் நடத்த தமிழக வனத்துறை அறிவித்திருந்தது.
அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் அணைகள், கண்மாய்கள், குளங்கள் உட்பட 26 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.
ராஜபாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆலங்குளம், கீழ ராஜகுலராமன், ராமலிங்கபுரம், தேவதானம், ஆறாம் மைல் நீர்த்தேக்கம் பகுதிகளிலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகத் தோப்பு பேயனாறு, பெரியகுளம் கண்மாய் உட்பட 5 இடங்களிலும், வத்திராயிருப்பில் பிளவக்கல் பெரியாறு அணை, வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாய், புதுப்பட்டி, சுந்தரபாண்டியம் கண்மாய் பகுதிகளிலும், சிவகாசியில் ஆனைக்குட்டம், வெம்பக்கோட்டை, சாத்தூரில் இருக்கன்குடி, விருதுநகரில் குல்லூர் சந்தை, அருப்புக்கோட்டை கண்மாய்களிலும் நேற்றும், நேற்று முன் தினமும் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.
இதில் வனத்துறையினருடன் பறவை ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், போட்டோகிராபர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். பின்னர் நேற்று மாலை வனச்சரக அலுவலகங்களில் தங்களது பதிவுகளை சமர்ப்பித்தனர். இதனை வனத்துறையினர் முறையாக ஆய்வு செய்யவுள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் என்னென்ன வகை பறவைகள் உள்ளன என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும் என வனத்துறை என தெரிவித்தனர்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகளவில் பெய்துள்ள நிலையில் அணைகள், கண்மாய்கள், குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால் நீர் பறவைகள் வரத்து பல இடங்களில் அதிகரித்துள்ளது. ஒரு சில இடங்களில் போதுமான அளவிற்கு பறவைகளை காண முடியவில்லை எனவும் பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.