/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரோடு, வாறுகால், சமுதாயக்கூடம், பூங்கா வசதிகள் இல்லை ரோடு, வாறுகால், சமுதாயக்கூடம், பூங்கா வசதிகள் இல்லை
ரோடு, வாறுகால், சமுதாயக்கூடம், பூங்கா வசதிகள் இல்லை
ரோடு, வாறுகால், சமுதாயக்கூடம், பூங்கா வசதிகள் இல்லை
ரோடு, வாறுகால், சமுதாயக்கூடம், பூங்கா வசதிகள் இல்லை
ADDED : ஜூன் 19, 2024 04:46 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் 23 ஆண்டுகளாக முறையான ரோடு,வாறுகால், சிறுவர் பூங்கா, சமுதாயக்கூடம் ,தாமிரபரணி குடிநீர் சப்ளை இல்லை, போக்குவரத்து நெருக்கடி, சுகாதாரக் கேடு, கொசு தொல்லை என பல்வேறு சிரமங்களுடன் வசித்து வருகின்றனர் கிருஷ்ணன் கோவில் போக்குவரத்து நகர் குடியிருப்பாளர்கள்.
இதுகுறித்து குடியிருப்பாளர் சங்க தலைவர் ராஜு, செயலாளர் கண்ணன், பொருளாளர் கணேசன், துணைத் தலைவர்கள் வேலுச்சாமி, தாமரைச்செல்வன் ஆகியோர் கூறியதாவது;
23 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவின் ஒரு பகுதியான கிருஷ்ணன் கோவிலில் போக்குவரத்து நகர் உருவாக்கப்பட்டது. தற்போது இங்கு 7 தெருக்களில் 220க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
இங்குள்ள 1,3,6,7 தெருக்களில் 23 ஆண்டுகளாக ரோடு வசதியோ, கழிவுநீர் வாறுகால்களோ கிடையாது. இதனால் மழை பெய்தால் சகதி ஏற்பட்டு சுகாதாரக் கேடு நிலவுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உருவான பல்வேறு புதிய நகர்களுக்கு தார் சாலை, சிமெண்ட் சாலை, தெரு விளக்கு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், போக்குவரத்து நகரில் முறையான ரோடு , வாறுகால் வசதி இல்லாததால் ஆங்காங்கே கழிவு தண்ணீர் தேங்கி கொசு தொல்லை நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கிருஷ்ணன்கோவிலில் இருந்து குன்னூர் வரை ஒரு வழிச்சாலையாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து நகரில் சமுதாயக்கூடம் கட்ட வேண்டுமென நாங்கள் கொடுத்த கோரிக்கையின் பேரில் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த நிலையில் அதனை போக்குவரத்து நகரில் கட்டாமல் குன்னூருக்கு கொண்டு செல்ல ஊராட்சி நிர்வாகம் அனுமதித்துள்ளது.
20 ஆண்டுகள் புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தவர்களுக்கு பட்டா வழங்கலாம் என்ற நிலையில் ஒருசிலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை.
23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலைத் தண்ணீர் தொட்டி மூலம் தான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இது போதுமானதாகவும் இல்லை. குடிப்பதற்கு ஏற்றதாகவும் இல்லை. எங்கள் பகுதி வழியாக தாமிரபரணி குடிநீர் திட்ட பம்பிங் ஸ்டேஷனும் வழித்தட பாதையும் உள்ள நிலையில் எங்கள் வீடுகளுக்கு தாமிரபரணி தண்ணீர் சப்ளை செய்யப்படவில்லை.
போக்குவரத்து நகர் குறுக்கு தெருவில் இருந்த சிறு பாலங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, இனிமேலாவது காலதாமதமின்றி மாவட்ட நிர்வாகம் நேரடி நடவடிக்கை எடுத்து 23 ஆண்டுகளாக நாங்கள் படும் சிரமங்களுக்கு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும், என்றனர்.