/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆட்கள் பற்றாக்குறையால் நடவு பணி தாமதம் ஆட்கள் பற்றாக்குறையால் நடவு பணி தாமதம்
ஆட்கள் பற்றாக்குறையால் நடவு பணி தாமதம்
ஆட்கள் பற்றாக்குறையால் நடவு பணி தாமதம்
ஆட்கள் பற்றாக்குறையால் நடவு பணி தாமதம்
ADDED : ஜூன் 18, 2024 06:48 AM

ராஜபாளையம் : விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் காலம் தாழ்த்தி நடவு பணிகளில் ஈடுபட்டுள்ளதால் வெங்காய விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
ராஜபாளையம் சுற்றியுள்ள கலங்காபேரி, புதுார், அய்யனாபுரம், சத்திரப்பட்டி, பேயம்பட்டி, கீழ ராஜகுலராமன், சுந்தர்ராஜபுரம், நத்தம்பட்டி, புனல் வேலி, மீனாட்சிபுரம் பகுதிகளில் கோடை மழையை அடுத்து வெங்காய விவசாயத்தில் பரவலாக விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
கண்மாயை ஒட்டி நெல் விவசாயம் மற்றும் நீர் இருப்பை பொறுத்து மிளகாய், வெங்காயம், மக்காச்சோளம் உள்ளிட்ட நீர் குறைவாக தேவைப்படும் பயிர் சாகுபடி செய்வது வழக்கம்.
2 வாரங்களுக்கு முன் தொடர்ந்த கோடை மழையின் காரணமாக இதற்கான ஆயத்த பணிகளான உழவு பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஒரே சமயத்தில் தொடங்கிய விவசாய பணிகளால் ஆள்கள் பற்றாக்குறை அதிகரித்தது. இதன் காரணமாக பாத்தி, நடவு பணிகள் மேற்கொள்ள தாமதம் ஆகின.
இதனால் வழக்கமான பருவத்தை விட்டு 15 நாட்களைக் கடந்து கலங்காப்பேரி சுற்று வட்டார கிராம பகுதியில் நடவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் வெங்காய விதைகளில் கழிவுகள் அதிகமானதோடு பருவம் தவறிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி பால்ராஜ் கூறுகையில், இந்த ஆண்டு வெங்காயம் விலை ஏற்றத்தினால் நல்ல பலன் இருக்கும் என நடவு பணிக்காக கடந்த இரண்டு வாரம் முன்பே திண்டுக்கல்லில் இருந்து விதை வெங்காயம் கிலோ 50 ரூபாய் என வாங்கினேன்.
நடவுக்கான விவசாய ஆட்கள் பற்றாக்குறையால் வெங்காயத்தை இருப்பு வைக்க வேண்டியதாயிற்று. தற்போது கழிவுகளை நீக்கி மீதமுள்ளவற்றை நடவு பணிகளில் மேற்கொண்டுஉள்ளோம். இதனால் எதிர்பார்த்த அளவு மகசூல் என்பது கடினம்.
வேலை ஆட்களுக்கானகூலி அதிகரித்தாலும் பற்றாக்குறை என்பது தொடர்ந்து வருகிறது. வேளாண் துறை அதிகாரிகள் மாற்று தீர்வு காண வேண்டும்.