/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காரியாபட்டி பஸ் டெப்போ நிரந்தரமாக எதிர்பார்ப்பு காரியாபட்டி பஸ் டெப்போ நிரந்தரமாக எதிர்பார்ப்பு
காரியாபட்டி பஸ் டெப்போ நிரந்தரமாக எதிர்பார்ப்பு
காரியாபட்டி பஸ் டெப்போ நிரந்தரமாக எதிர்பார்ப்பு
காரியாபட்டி பஸ் டெப்போ நிரந்தரமாக எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 04, 2024 05:39 AM
காரியாபட்டி : காரியாபட்டி பஸ் டெப்போவை நிரந்தரமாக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
காரியாபட்டியில் பஸ் டெப்போ இல்லாத காலகட்டத்தில் பழுதாகி நின்ற பஸ்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய சிரமமாக இருந்தது. பணியாளர்களும் அருப்புக்கோட்டை, விருதுநகர் டெப்போக்களில் கையெழுத்திட்டு, காரியாபட்டியில் காத்திருந்து பஸ்களை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால், கிராமப்புறங்களுக்கு பஸ்களை இயக்குவதில் சிரமம் இருந்து வந்தது.
அப்போதைய தி.மு.க., ஆட்சியில் காரியாபட்டியில் தற்காலிக பஸ் டெப்போ துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாடகை இடத்தில் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்து வந்த அ.தி.மு.க., ஆட்சியில் டெப்போ கண்டுகொள்ளப்படவில்லை. அப்போதைய முதல்வர் ஜெ., 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்த பல்வேறு இடங்களில் டெப்போக்கள் கட்டப்பட்டு, நிரந்தரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் காரியாபட்டியில் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாததால் டீசல், ஸ்பேர் பார்ட்ஸ் உள்ளிட்ட பொருட்களை மற்ற டெப்போக்களில் இருந்து எதிர்பார்த்து ஆத்தர அவசரத்திற்கு உடனடியாக செயல்படுத்த முடியவில்லை. பணியாளர்கள் ஓய்வெடுக்க ஓய்வறை கிடையாது. மழை நேரங்களில் சேறும் சகதியுமாகி பஸ்கள் சென்று வருவதில் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. மழை, வெயிலுக்கு பணியாளர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சுற்றுச்சுவர் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
காரியாபட்டியில் டெப்போ ஆரம்பித்தால் மதுரை டெப்போவில் இருந்து பல்வேறு பஸ்களை பிரிக்க வேண்டும் என்பதால், காரியாபட்டியில் நிரந்தர டெப்போ அமைக்க அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். காரியாபட்டியில் நிரந்தர பஸ் டெப்போ அமைக்க பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காரியாபட்டியில் அரசு புறம்போக்கு நிலங்கள் ஏராளமாக உள்ளன. தனி நபர்கள் ஆக்கிரமித்து பட்டா போட்டு வருகின்றனர். ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்தி நிரந்தர பஸ் டெப்போ அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.