/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மூடிய பட்டாசு ஆலைகளால் பணமின்றி தொழிலாளர்கள்பரிதவிப்பு மூடிய பட்டாசு ஆலைகளால் பணமின்றி தொழிலாளர்கள்பரிதவிப்பு
மூடிய பட்டாசு ஆலைகளால் பணமின்றி தொழிலாளர்கள்பரிதவிப்பு
மூடிய பட்டாசு ஆலைகளால் பணமின்றி தொழிலாளர்கள்பரிதவிப்பு
மூடிய பட்டாசு ஆலைகளால் பணமின்றி தொழிலாளர்கள்பரிதவிப்பு
ADDED : ஜூன் 09, 2024 02:39 AM
மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர், வெம்பக்கோட்டை, சாத்துார் பகுதியில் 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. கடந்த மாதம் அடுத்தடுத்து நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் குழுக்கள் அமைத்து விதிமீறி இயங்கும் பட்டாசு ஆலைகளில் தொடர் ஆய்வு நடத்தப்பட்டு, விதி மீறிய ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள டாப்மா சங்கத்தினர் இருவாரமாக ஆலைகளை பூட்டி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
இதனால் தொழிலாளர்கள் வட்டிக்கு பணம் கடன் வாங்கி , வட்டியும் அசலும் கட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர். நெருக்கடிக்கு ஆளாகி தற்கொலைக்கு துாண்டப்படுகின்றனர். ஏற்கனவே திருத்தங்கல் பாலாஜி நகரில் மே 23 ல் கந்து வட்டி காரணமாக அரசு பள்ளி ஆசிரியர் தம்பதியினர் லிங்கம், பழனியம்மாள் தங்களது மகன், மகள், பேத்தி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
3 நாட்களுக்கு முன்பு கடன் தொல்லையால் மீனம்பட்டி திடீர் நகரைச் சேர்ந்த ஞானபிரகாசி தனது மகள் சர்மிளாவுடன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரு நாட்களுக்கு முன்பு திருத்தங்கலில் மூன்று பட்டாசு பெண் தொழிலாளர்களுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். கந்து வட்டி கொடுமை மற்றும் தற்கொலைக்கு துாண்டியதாக சிவகாசி பகுதியில் 3 பெண்கள் உள்பட 11 பேர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மீனம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பட்டாசு ஆலைகளில் வேலை வாய்ப்பை இழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர். இதனால் இவர்கள் வேறு வழியின்றி வார, மாத வட்டிக்கு கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வேறு வாழ்வாதாரமும் இல்லாததால் பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகி தற்கொலைக்கு துாண்டப்படுகின்றனர்.
எனவே மீனம்பட்டியில் பட்டாசு தொழில் முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்சமயம் கிராம மக்களுக்கு சரிவர வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால், கடன் கொடுத்தவர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர்கள் ஜூலை 5 வரை கடன் வசூலிக்க தங்களது கிராமத்துக்கு வர வேண்டாம் என எழுதி வைத்துள்ளனர்.
தற்போது பள்ளி,கல்லுாரி திறக்கும் நேரம் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வருமானம் இல்லாததால் கந்து வட்டிக்காரர்களிடம் அதிக வட்டிக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இக்கொடுமையிலிருந்து பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அவர்கள் கந்துவட்டி கொடுமையில் இருந்து தப்பிக்க வாய்ப்பு ஏற்படும்.