Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆலைகளில் உற்பத்தி லாபத்தை அதிகரிக்க உதவும் ஆற்றல் தணிக்கை சேமிப்பு திட்டம்

ஆலைகளில் உற்பத்தி லாபத்தை அதிகரிக்க உதவும் ஆற்றல் தணிக்கை சேமிப்பு திட்டம்

ஆலைகளில் உற்பத்தி லாபத்தை அதிகரிக்க உதவும் ஆற்றல் தணிக்கை சேமிப்பு திட்டம்

ஆலைகளில் உற்பத்தி லாபத்தை அதிகரிக்க உதவும் ஆற்றல் தணிக்கை சேமிப்பு திட்டம்

ADDED : ஜூலை 10, 2024 06:52 AM


Google News
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உற்பத்தி, லாபத்தை அதிகரிக்க தொழில் மையத்தில் ஆற்றல் தணிக்கை, சேமிப்பு திட்டம் உதவுகிறது. ஓராண்டில் மட்டும் இதில் 16நிறுவனங்கள் வரை பயன்பெற்றுள்ளன.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு முறைகளில் பயன்படுத்தும் ஆற்றலை தணிக்கை செய்து ஆற்றலை சேமித்து நிறுவனத்தில் லாபத்தை அதிகப்படுத்த இத்திட்டம் உதவுகிறது.

இதன் படி ஆலைகளில் மின் இயந்திர, வெப்ப ஆற்றல்களை பல்வேறு வகையான ஆற்றல் இழப்புகளை வல்லுனர்களை கொண்டு தணிக்கை செய்து ஆற்றலை சேமிக்க அறிவுரைகள் வழங்கப்படும்.

ஆற்றல் மேம்பாட்டு தணிக்கை, ஆற்றலை சேமிப்பதற்கான தணிக்கை பணிகளை செய்ய ஏற்படும் மொத்த செலவில் 75 சதவீத தொகையை அரசு வழங்கும். அதே போல் நிறுவப்படும் அல்லது புதுப்பிக்கப்படும் உயர் தொழில் நுட்பத்திற்கான இயந்திரங்கள், தளவாடங்கள் நிறுவும் பட்சத்தில் ஆற்றல் தணிக்கை பரிந்துரை அறிக்கையின் படி மொத்த மதிப்பில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.

மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் ஆற்றல் தணிக்கை செய்து 10 முதல் 20 சதவீதம் வரை ஆற்றல் சேமிப்பை உறுதி செய்துள்ளனர்.

இதன் மூலம் நுாற்பாலைகளில் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.10 லட்சம் வரை மின்னாற்றல் சேமிப்பு மூலமாக பயனடைந்துள்ளனர்.

2023---24ம் ஆண்டில் தணிக்கை திட்டத்தில் 14 நிறுவனங்கள் பயன்பெற்று ரூ.6.83 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது. சேமிப்பு திட்டத்தில் 2 நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இது ஒரு வகையில் மின் சிக்கனத்திற்கும் உதவுவதால் மின்துறை தொடர்பான சிக்கல்களும் தவிர்க்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ராமசுப்பிரமணியன் கூறியதாவது: மாவட்டத்தில் இயங்கும் நுாற்பாலைகள், பின்னலாடை நிறுவனங்கள், காகித, அட்டை உற்பத்தி நிறுவனங்கள், அரிசி ஆலைகள், பிரிண்டிங், தீப்பெட்டி, உணவு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், பருப்பு ஆலைகள், இதர அனைத்து வகை உயர் மின்னழுத்த, குறைந்த மின்னழுத்த நிறுவனங்கள், அனைத்து சிறு, நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தை பயன்படுத்தலாம்.

இதன் மூலம் உற்பத்தி செலவை குறைத்து லாபத்தை அதிகப்படுத்தி பயன்பெறலாம்.

விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us