ADDED : ஜூன் 11, 2024 05:42 PM
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை பகுதியில், 17 நாட்களாக மூடப்பட்டிருந்த பட்டாசு ஆலைகள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுடன் நடந்த பேச்சுக்குப்பின் நேற்று முதல் இயங்கின.
சிவகாசி பகுதியில் சரவெடி உற்பத்தி செய்யும் சிறு பட்டாசு ஆலைகளை நடவடிக்கை எடுப்பதை கண்டித்து தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கமான 'டாப்மா' சார்பில், மே 24 முதல் பட்டாசு ஆலைகளை மூடி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மே 27ல் இச்சங்கத்தினர் கலெக்டரிடம் நடந்த பேச்சு தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடர்ந்தது. 17 நாட்களாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் வருமானமின்றி சிரமப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அமைச்சர் ராமச்சந்திரன் டாப்மா சங்கத்தினரிடம் பேச்சு நடத்தினார். தொடர்ந்து, இரு வாரத்திற்கு மேலாக ஸ்டிரைக்கில் ஈடுபட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நேற்று முதல் ஆலைகளை திறந்தனர்.
டாப்மா செயலாளர் மணிகண்டன் கூறியதாவது:
பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக அரசு இருக்கும் என அமைச்சர் உறுதியளித்தார். மேலும் தொழிலாளர்களின் நலன் கருதியும் குழந்தைகளின் கல்வி நலன் கருதியும் நேற்று முதல் பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.