Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சீமை கருவேல மரங்கள், புதர்கள் சூழ்ந்த கண்மாய்

சீமை கருவேல மரங்கள், புதர்கள் சூழ்ந்த கண்மாய்

சீமை கருவேல மரங்கள், புதர்கள் சூழ்ந்த கண்மாய்

சீமை கருவேல மரங்கள், புதர்கள் சூழ்ந்த கண்மாய்

ADDED : ஜூன் 06, 2024 05:29 AM


Google News
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே விருதுநகர் ரோட்டில் உள்ள பெரிய புளியம்பட்டி கண்மாயில் சீமை கருவேல மரங்கள், முட்புதர்கள், பராமரிப்பில்லாத வரத்து ஓடை, காட்டு பன்றிகளின் புகலிடமாக மாறி அழியும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அருப்புக்கோட்டையில் 80 ஏக்கர் பரப்பளவில் பெரிய புளியம்பட்டி கண்மாய் உள்ளது. சுற்றியுள்ள 500 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்தது.

அருகில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்தது. விவசாயிகள் கம்பு, சோளம், பருத்தி உட்பட பயிர்களை விவசாயம் செய்து வந்தனர். கண்மாயை சுற்றியுள்ள காட்டு பகுதிகளிலிருந்தும், பாலவநத்தம் பெரிய கண்மாயில் வெளியேறும் உபரி நீரும் சேரும்.

இந்த கண்மாயிலிருந்து அருப்புக்கோட்டை பெரிய கண்மாய், செட்டிகுறிச்சி, பந்தல்குடி, மேலகரந்தை, கீழக்கரந்தை உட்பட பல கண்மாய்கள் நிறைந்து அங்கிருந்து உபரி நீர் வைப்பாற்றில் சென்று கலக்கும். கண் மாயையும் நீர்வரத்து ஓடையும் பராமரிக்காமல் விட்டதால் மழைநீர் நிறையவில்லை. கண்மாய் முழுவதும் சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. இவை கண்மாயில் இருக்கின்ற தண்ணீரையும் உறிஞ்சி விடுகின்றன.

இதனுடன் முட் புதர்களும் வளர்ந்து கண்மாய் முழுவதும் காடு போல் காட்சியளிக்கிறது. இதை பயன்படுத்தி காட்டு பன்றிகள், மான்களின் புகலிடமாக கண்மாய் உள்ளது. இரவு நேரங்களில் இவைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை பாழாக்குகின்றன. பின்னர் இந்த கண்மாயில் தஞ்சம் அடைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பன்றிகள் தொல்லையால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். பயிர்கள் பாழாவதுடன் நஷ்டமும் ஏற்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, பல லட்சம் நிதியில் கண்மாய் தூர் வாரப்பட்டு எந்த பயனும் இல்லை. இதனால், கண்மாயை நம்பி பாசன வசதி பெற்ற விவசாய நிலங்கள் தரிசாக உள்ளன. கண்மாய் கரைகள் பலமிழந்து போய் விட்டது. மழைநீர் மறுகால் ஓடை சேதமடைந்துள்ளது.

இன்னும் சில ஆண்டுகளில் கண்மாய் காணாமல் போய் விடும் நிலையில் உள்ளது. நல்ல சுத்தமான மழைநீர் சேகரமாகும் பெரிய புளியம்பட்டி கண்மாயை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us