ADDED : மார் 14, 2025 06:29 AM
தண்ணீர் கசியும் மேல்நிலை தொட்டி. சேதமடைந்த அங்கன்வாடி மையம். *அவதியில் கீழ குருணை குளம் மக்கள்
திருச்சுழி: திருச்சுழி அருகே கீழக்குருணைகுளத்தில் கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் கசிந்து வருவதாலும், சேதமடைந்த அங்கன்வாடியில் குழந்தைகளை அனுப்ப மக்கள் தயங்குகின்றனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஆலடிபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது கீழக்குருணை குளம் கிராமம். இங்கு 10 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு கழிப்பறை கட்டி 2 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. கழிப்பறையை சுற்றி புதர்கள் சூழ்ந்து கட்டடம் தெரியாதவாறு உள்ளது. குளியல் தொட்டி கட்டப்பட்டுசேதம் அடைந்து பயன்பாடின்றி உள்ளது . அங்கன்வாடி மையம் சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக கட்டப்பட்ட மேல்நிலைதொட்டி சேதமடைந்து தண்ணீர் கசிந்து முழுவதும் வெளியேறி விடுகிறது. மேல்நிலைத் தொட்டி இருந்தும் பயனில்லை. ஊரை சுற்றி கல்குவாரிகள் உள்ளன. ஊருக்கு வரும் ரோடு அருகில் செயல்படாத குவாரி மெகா பள்ளமாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சுற்றிலும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். குவாரிகளின் கனரக வாகனங்கள் அதிக டன் எடையுள்ள மண், கற்கள் கொண்டு செல்வதால் ரோடு அடிக்கடி சேதமடைகிறது.
ஊரில் நூலகம் அமைக்க வேண்டும். சமுதாயக்கூடம் கட்டித் தரப்பட வேண்டும். ஊரில் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் 3 கி.மீ., தூரம் நடந்து அருகில் உள்ள தமிழ்பாடிக்கு சென்று தான் படிக்க வேண்டியுள்ளது. பஸ் வசதி இல்லை. பள்ளி நேரத்தில் பஸ்கள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கழிப்பறை வேண்டும்
ராஜாமணி, விவசாயி : கீழ குருணை குளம் கிராமத்தில் நவீன சுகாதார வளாகம் கட்ட வேண்டும். இங்குள்ள கழிப்பறை கட்டி 2ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராததால் பெண்கள் சிரமப்படுகின்றனர். மக்கள் நலனுக்காக கட்டி தரப்படும் கட்டங்களை உடனுக்குடன் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். லட்சக்கணக்கு செலவழித்து கட்டியும் பயன்படாமலேயே வீணாகிறது.
* வசதிகள் இல்லாத மயானம்
அடைக்கலம், டிரைவர் : கீழ குருணை குளம் கிராமத்தில் ஊராட்சி மூலம் கட்டப்பட்ட மயானம் வசதிகளில் இன்றி இருப்பதால் சிரமமாக உள்ளது. மயானத்திற்கு செல்ல ரோடு வசதி இல்லை. இறுதிச் சடங்குகள் செய்ய அறை இல்லை. மயானம் பராமரிப்பு இன்றி இருப்பதால் இறுதிச் சடங்கு செய்ய வருகின்றவர்கள் சிரமப்பட வேண்டியுள்ளது.
* சேதமடைந்த மேல்நிலை தொட்டி
பெரியசாமி, விவசாயி : கீழகுருணை குளம் கிராமத்தில் 2 மேல் தொட்டிகள் உள்ளன. ஒன்று சேதம் அடைந்துள்ளது. மற்றொன்று கட்டி 2 ஆண்டுகள் ஆன நிலையில் தொட்டியில் நீர்க்கசிவு ஏற்பட்டு தண்ணீரை தேக்கினாலும் நிற்பதில்லை. ஊரில் 2 மேல் தொட்டிகள் இருந்தாலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் தண்ணீருக்கு மக்கள் அலைய வேண்டிய உள்ளது. 2 தொட்டிகளையும் பராமரித்து ஊர் மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும்.
___
படம் உள்ளது