/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பொங்கல் பண்டிகைக்கு மண் பானைகள் தயாரிப்பு... தீவிரம்பொங்கல் பண்டிகைக்கு மண் பானைகள் தயாரிப்பு... தீவிரம்
பொங்கல் பண்டிகைக்கு மண் பானைகள் தயாரிப்பு... தீவிரம்
பொங்கல் பண்டிகைக்கு மண் பானைகள் தயாரிப்பு... தீவிரம்
பொங்கல் பண்டிகைக்கு மண் பானைகள் தயாரிப்பு... தீவிரம்
ADDED : ஜன 06, 2024 05:08 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்காக மண் பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மக்கள், பாரம்பரியப்படி மண் பானையில் பொங்கலிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழர் திருநாளாம் தை திருநாள் பொங்கல் பண்டிகை வரும் ஜன.15ம் தேதி கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை தொடங்கி தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் என பொங்கல் விழா கோலாகலமாக நடக்க உள்ளது. புதுப்பானையில் பொங்கலிட்டு, உழவுக்கும், விவசாயத்துக்கும் துணைநிற்கும் இயற்கை, கால்நடைகளை வழிபடுவர்.
பொங்கல் பண்டிகையையொட்டி விழுப்புரம் அருகே சாலைஅகரம், ராகவன்பேட்டை, அய்யூர்அகரம், அய்யங்கோவில்பட்டு, கண்டமானடி, மரகதபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் மண் பானைகள் தயாரிக்கும் பணியில், மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மண்பானைகள் தயாரித்து, அதனை சூளையிடும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் மண் பானைகள் விழுப்புரம் மட்டுமின்றி புதுச்சேரி, சென்னை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
கடந்தாண்டு மழையால் மண் பானை தயாரிப்பு பாதிக்கப்பட்டதால், இந்தாண்டு முன்னதாகவே நவம்பர், டிசம்பரில் பானைகள் தயாரிக்கும் பணியை தொடங்கி மேற்கொண்டுள்ளனர்.
சிறியது, நடுத்தரம், பெரியது என மூன்றுவிதமான பொங்கல் பானைகள் தயாரிக்கின்றனர். ரூ.50 முதல் ரூ.200 வரை பானைகள் விற்பனைக்கு வழங்கப்படுகிறது. பானைகள் தயாரித்து, அதனை உலர வைத்து, பிறகு சூளையிட்டு வேக வைத்து, விற்பனைக்கு வைக்கின்றனர்
இந்தாண்டு பானை தயாரிப்பு குறித்து சாலைஅகரம், அய்யங்கோவில்பட்டு மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: மூன்று தலைமுறையாக மண்பாண்டம் தயாரிப்பு தொழிலை செய்து வருகிறோம். களிமண் கிடைப்பது சிரமமாக உள்ளது. கார்த்திகை தீபத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையில் தான் அகல் விளக்கு மற்றும் பானைகள் விற்பனை என, எங்களின் வாழ்வாதாரம் உள்ளது.
பாரம்பரிய மண்பானை சமையல், தண்ணீர் எடுப்பது போன்றவை தற்போது கிராமங்களில் கூட மறைந்துவிட்டது. மண்பாண்ட பொருட்களின் பயன்பாடும் குறைந்துள்ளது. இதனால், பலர் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். ஒரு சில கிராமத்தில் மட்டும், பாரம்பரிய தொழிலை கைவிடாமல் மண் பாண்டங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போது, வீடுகளில் பலர், கேஸ் அடுப்புகளில் பாத்திரங்களை வைத்து, பொங்கல் வைத்து விடுகின்றனர். இதனால், பொங்கல் பானை வாங்குவதும் குறைந்துவிட்டது.பள்ளி, கல்லூரிகளில், பாரம்பரியத்தை நினைவு படுத்தும் விதமாக மண்பானையில் பொங்கலிட்டு வழிபடுகின்றனர்.
ஆண்டுக்கு ஒருமுறையாவது, வீடுகளில் பானை வைத்து மக்கள் பொங்கலிட வேண்டும். தமிழக அரசு ஆண்டு தோறும், குடும்ப அட்டைதாரர்களுக்கு, கரும்பு, சமையல் பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்க பணத்தை வழங்கி வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்புடன், பொங்கலிடுவதற்கு முக்கிய பொருளான மண் பானைகளையும் சேர்த்து வழங்க வேண்டும். தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் விதமாக, நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட, அரசு மண் பானைகளை கொள்முதல் செய்து, பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க வேண்டும் என்றனர்.