Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாவட்ட காவல் துறையில் போலீசார்... பற்றாக்குறை; கூடுதல் பணிச்சுமையால் அவதி

மாவட்ட காவல் துறையில் போலீசார்... பற்றாக்குறை; கூடுதல் பணிச்சுமையால் அவதி

மாவட்ட காவல் துறையில் போலீசார்... பற்றாக்குறை; கூடுதல் பணிச்சுமையால் அவதி

மாவட்ட காவல் துறையில் போலீசார்... பற்றாக்குறை; கூடுதல் பணிச்சுமையால் அவதி

ADDED : மார் 21, 2025 04:18 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் போலீசார் பற்றாக்குறை இருப்பதால் கூடுதல் பொறுப்புகளை இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் கவனிக்கின்றனர். இதனால், இவர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரிவு, போக்குவரத்து, நெடுஞ்சாலை ரோந்து மற்றும் ஆயுதப்படை, அதிரடிப்படை உள்ளிட்ட 1,200 போலீசார் பணியில் உள்ளனர். இந்த போலீசார், காவல் நிலைய பணிகள் மட்டுமின்றி, நீதிமன்ற பணி, கைதிகளை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் பணி, வெளி மாவட்டங்களில் வி.ஐ.பி.க்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் வழக்குகளின் தேக்கம் அதிகமாக இருப்பதால், காவல் துறை உயர் அதிகாரிகள் விசாரணை செய்து, இதன் தேக்கத்தை குறைக்க வேண்டும் என காவல் நிலைய பொறுப்பில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

வழக்குகளை விசாரணை செய்வதற்கு, அந்தந்த காவல் நிலையங்களில் போதுமான போலீசார் பணியில் இல்லாததால் என்ன செய்வதென புரியாமல் பொறுப்பில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்த சூழலில், போலீஸ் பற்றாக்குறையால் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகம், டி.எஸ்.பி., முகாம் அலுவலகங்களில் போலீஸ் தகுதியில் இருப்போர் பணிபுரிய வேண்டிய கணினி ஆபரேட்டிங் பணிகளில் சப் இன்ஸ்பெக்டர்கள் பணிபுரிகின்றனர். மேலும், காவல் நிலையங்களில் பணியில் உள்ள போலீசார், எஸ்.பி., அலுவலகங்களில் உள்ள தனிப்பிரிவு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும், மாவட்டத்தில் போலீசாரின் பிரச்னைகளை கவனித்து சரக டி.ஐ.ஜி., எஸ்.பி.,க்கு கூற வேண்டிய தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடமும் தற்போது காலியாக உள்ளது.

இந்த தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பொறுப்பில் பணிக்கு வருவோர் ஓராண்டு கூட பணியில் நிலைத்து நிற்காமல் காவல்நிலைய பணிக்கு கேட்டு சென்று விடுகின்றனர்.

இதனால், அனைத்து பொறுப்புகளையும் தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே கவனித்து வருவதால் அவர்கள், மைக்கில் வரும் தகவல்களுக்கு கூட பதில் கூற முடியாமல் மன உளைச்சலில் உள்ளனர்.

சட்டம், ஒழுங்கு பிரிவு போலீஸ் மட்டுமின்றி, போக்குவரத்து பிரிவிலும் கூட இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பொறுப்பில் உள்ள வசந்த் கூடுதலாக கவனிக்கிறார். இதேபோல், போலீசாரின் பல்வேறு பணி நிலைகளிலும் ஆட்கள் பற்றாக்குறை நீடிக்கிறது.

இதனால், கூடுதல் பணிகளை போலீசார் கவனித்துக்கொண்டு, பணிச்சுமை, நீடிப்பதால் அவர்கள் குடும்பத்தாரிடம் குறைகளை கூறுவதோடு, வெளியே சக போலீஸ்காரர்களிடம் மட்டும் கூறி புலம்புகின்றனர்.

காவல் துறை உயர் அதிகாரிகள் இதை கவனித்து, மாவட்டத்தில் பற்றாக்குறையாக உள்ள போலீசார் பணியிடங்களை விரைவாக நிரப்பி, அவர்களின் பணி மற்றும் மனச்சுமைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நமது நிருபர்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us