/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் மின்வெட்டு! மாதாந்திர பராமரிப்பு பணி நடக்குமா?விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் மின்வெட்டு! மாதாந்திர பராமரிப்பு பணி நடக்குமா?
விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் மின்வெட்டு! மாதாந்திர பராமரிப்பு பணி நடக்குமா?
விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் மின்வெட்டு! மாதாந்திர பராமரிப்பு பணி நடக்குமா?
விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் மின்வெட்டு! மாதாந்திர பராமரிப்பு பணி நடக்குமா?
ADDED : ஜூன் 20, 2024 04:27 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தல் காரணமாக கடந்த 4 மாதங்களாக மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடக்காதால், பல இடங்களில் மின் வெட்டு தொடர்ந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், கோடை வெயில் தொடங்கிய மார்ச் மாதம் முதல் ஜூன் வரை அடிக்கடி மின் வெட்டு தொடர்ந்து வருகிறது. கோடை வெயில் உச்சத்தில் இருந்த கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஏ.சி., உள்ளிட்ட மின் சாதனங்கள் அதிக பயன்பாடு காரணமாக மின் வெட்டு ஏற்படுவதாக குறிப்பிட்டனர்.
விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட இடங்களில் இரவு நேரங்களில் அடிக்கடி 2 முதல் 4 மணி நேரம் வரை மின் வெட்டு ஏற்பட்டது. கத்திரி வெயில் மே மாதம் முடிந்த நிலையில், தற்போதும் இரவு நேரங்களில் மின் வெட்டு தொடர்கிறது.
விழுப்புரத்தில் கடந்த வாரம் சூறை காற்றுடன் திடீர் மழை பெய்தது. இதனால், விழுப்புரம் நகரம், கிராமப்புறங்களில் மின் வெட்டு 4 முதல் 5 மணி நேரம் வரை நீட்டித்தது. இதே போல், விழுப்புரம் அருகே காணை வட்டாரத்தில் ஒரு மணி நேர காற்று, மழையால் ஒரு நாள் முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அப்போது, விழுப்புரம் நகரிலும், கலெக்டர் வளாகம் மற்றும் வி.ஐ.பி., குடியிருப்புகள், லோக்சபா ஓட்டு எண்ணும் மையத்தில் மட்டும் மின்சாரம் இருந்தது. பிற இடங்களில் ஒரு நாள் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
நகர பகுதியில் மின்சாரம் படிப்படியாக வழங்கிய நிலையில், புறநகர் பகுதிகள், கிராமப்புறங்களில் மின்சாரத்தை நிறுத்தி வைத்தனர். இந்த மாதம் தொடக்கத்திலிருந்து இடையே அடிக்கடி திடீர் மழை பெய்து வருகிறது.
இரவு நேரங்களில் விழுப்புரம் நகரில் பல இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டு, பல மணி நேரம் மின்சாரம் வழங்காமல் இருந்தனர். மின்சார பழுதுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலை பேசியையும் அவர்கள் எடுப்பதில்லை.
இதே போல், நேற்று முன்தினம் மாலை திடீர் மழை பெய்தது. வழக்கம் போல், விழுப்புரத்தில் மின் வெட்டு ஏற்பட்டது. சாலாமேடு, கே.கே.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8:00 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டு நள்ளிரவு 11:00 மணிக்குத்தான் வந்தது. இதே போல், மரக்காணம், திண்டிவனம், தி.வி.நல்லுார், விக்கிரவாண்டி வட்டாரங்களில் பல இடங்களில் குறைந்த மின்னழுத்தம் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
தொடர் மின்வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: திடீர் மழையின்போது, மின்னல் தாக்கியதில், உயர் மின்னழுத்த லைன்களில் உள்ள இன்சுலேட்டர்கள் வெடித்து மின் தடை ஏற்படுகிறது. அதனை கண்டுபிடித்து சரி செய்ய நீண்ட நேரம் ஆகிறது. அதிகளவில் ஏ.சி., பயன்பாடு போன்றவற்றாலும், மின்சார லைன்களில் மரங்கள் விழுவதாலும் மின் வெட்டு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் தாமதம் ஏற்படுகிறது. பழைய இன்சுலேட்டர்கள் மின்னலில் பாதிப்பதால், தற்போது, பாலிமர் இன்சுலேட்டர்களை மாற்றிவருகிறோம்' என்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மாதாந்திர பராமரிப்பு செய்யாமல் உள்ளது. அரசின் வாய்மொழி உத்தரவால், மின் நிறுத்தம் செய்யாமல் உள்ளனர். இருப்பினும், வாரந்தோறும் ஒவ்வொரு பகுதி என, தலா 2 மணி நேரம் மட்டும் சுழற்சி முறையில் மின்சாரத்தா நிறுத்தி, பராமரிப்பு பணி மேற்கொள்கின்றனர். இந்த 2 மணி நேரத்தில் முழு பராமரிப்பும் செய்ய முடியாது. மாதாந்திர பராமரிப்பு பணி நடந்தால் தான், இந்த பழுதுகளை சீரமைக்க முடியும் என்று மின்துறையினர் கூறுகின்றனர்.