ADDED : ஜன 25, 2024 05:27 AM
விழுப்புரம் : வளவனுாரில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர்.
வளவனுார் சிவசண்முகா நகரை சேர்ந்தவர் திரவியராஜ், இவரும், இவர் மனைவியும் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர்களாக பணிபுரிகின்றனர்.
இவர்கள், கடந்த 22ம் தேதி காலை 8.00 மணிக்கு வீட்டை பூட்டி கொண்டு பணிக்கு சென்று விட்டு, பின் உறவினர் வீட்டிற்கு சென்றனர்.
நேற்று முன்தினம் மாலை 5.00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின், உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.20 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.