/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சங்கராபரணி ஆற்றில் தடுப்பணைகள் தேவை! தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?சங்கராபரணி ஆற்றில் தடுப்பணைகள் தேவை! தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?
சங்கராபரணி ஆற்றில் தடுப்பணைகள் தேவை! தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?
சங்கராபரணி ஆற்றில் தடுப்பணைகள் தேவை! தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?
சங்கராபரணி ஆற்றில் தடுப்பணைகள் தேவை! தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?
ADDED : ஜன 01, 2024 12:19 AM
செஞ்சி : செஞ்சி, திண்டிவனம் பகுதியில் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீரை பாதுகாக்க சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மேல்மலையனுார், செஞ்சி மற்றும் திண்டிவனம் தாலுகாவில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ஆறுகள் இல்லை. செஞ்சி அடுத்த பாக்கம் மலைக் காடுகளில் உருவாகும் வராக நதியும், மேல்மலையனுார் பெரிய ஏரி உபரிநீர் பகுதியில் துவங்கும் சங்கராபரணி ஆறும், தொண்டூர் பெரிய ஏரியில் துவங்கும் தொண்டி ஆறு மட்டுமே இப்பகுதிக்கான நீர் ஆதாரமாக உள்ளது.
இந்த 3 ஆறுகளும் முற்றிலும் பருவ மழையை நம்பியே உள்ளன. பருவ மழை அதிகம் பெய்யும் ஆண்டுகளில் மட்டுமே மேல்மலையனுார், தொண்டூர் ஏரிகள் நிரம்பும். காடுகளில் இருந்து வெள்ளம் வருவதால் வராக நதியில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் வரும்.
மேல்மலையனுாரில் துவங்கும் சங்கராபரணி ஆற்றில் செவலப்புரை அருகே வராக நதி கலக்கிறது. ரெட்டணை அருகே தொண்டியாறு சங்கராபரணி ஆற்றில் கலக்கிறது. அதன் பிறகு தொடர்ந்து செல்லும் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே வீடூரில் அணை கட்டப்பட்டுள்ளது.
இந்த மூன்று தாலுகாக்களிலும் 80 சதவீதம் பேர் விவசாயம் சார்ந்தவர்கள். இவர்களில் பெரும் பகுதியினர் கிணற்று பாசனத்தை நம்பியுள்ளனர். விவசாய கிணறுகளுக்கு இந்த மூன்று ஆறுகளில் வரும் தண்ணீரே முக்கியமான நீர் ஆதாரமாக உள்ளது.
வராக நிதியில் வரும் காட்டு வெள்ளம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சங்கராபரணி ஆற்றில் செஞ்சியைக் கடந்து வெள்ளம் செல்கிறது. இந்த வெள்ளத்தினால் வீடூர் அணை விரைவாக நிரம்பி உபரி நீர் கடலுக்கு செல்கிறது. பருவ மழை நின்றதும் சங்கராபரணியில் தண்ணீர் செல்வதும் நின்று விடும். அதன்பிறகு ஆண்டு முழுதும் தண்ணீர் செல்வதில்லை.
வெள்ளம் சென்ற சில மாதங்கள் வரை கிணறுகளில் நீர் மட்டம் குறையாமல் இருக்கும். கோடை துவங்கியதும் கிணறுகளின் நீர் மட்டம் கிடு கிடுவென குறைந்து அடி மட்டத்திற்கு சென்று விடும். குறிப்பாக மே, ஜூன் மாதங்களில் நடவு செய்த பயிர்களை மீட்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. இது போன்ற நாட்களில் செஞ்சி பகுதி விவசாயிகள் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கி நடவு செய்த பயிரை அறுவடை செய்யும் அவலம் உள்ளது.
சங்கராபரணி ஆற்றில் செவலப்புரை, மேலச்சேரி, ராஜாம்புலியூர் ஆகிய மூன்று இடங்களில் மட்டும் சிறிய தடுப்பணைகள் உள்ளன. செஞ்சி, வல்லம் மற்றும் ரெட்டணை பகுதியில் தடுப்பணைகள் இல்லை. இந்த இடங்களில் தடுப்பணைகள் இருந்தால் இதில் தேக்கி வைக்கப்படும் நீர் ஆண்டு முழுதும் செஞ்சி, வல்லம், திண்டிவனம் பகுதி விவசாய கிணறுகளின் நீர்மட்டம் குறையாமல் பாதுகாப்பாக இருக்கும்.
இதனால், செஞ்சி, வல்லம், ரெட்டணை பகுதிகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தற்போதைய ஆளும் கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சியினரும் சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்டுவோம் என வாக்குறுதி அளித்தனர்.
இந்த வாக்குறுதியை நிறைவேற்ற அமைச்சர் மஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.