/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அடிப்படை வசதியை வலியுறுத்தி அ.தி.மு.க., கவுன்சிலர் போராட்டம் அடிப்படை வசதியை வலியுறுத்தி அ.தி.மு.க., கவுன்சிலர் போராட்டம்
அடிப்படை வசதியை வலியுறுத்தி அ.தி.மு.க., கவுன்சிலர் போராட்டம்
அடிப்படை வசதியை வலியுறுத்தி அ.தி.மு.க., கவுன்சிலர் போராட்டம்
அடிப்படை வசதியை வலியுறுத்தி அ.தி.மு.க., கவுன்சிலர் போராட்டம்
ADDED : செப் 12, 2025 04:01 AM

விழுப்புரம்: பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு கோரி, அ.தி.மு.க., கவுன்சிலர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
விழுப்புரத்தில், கடந்த சில தினங்களாக, 8 வது வார்டுக்கு உட்பட்ட திரு.வி.க., வீதி அருகே உள்ள வாணியர் தெரு, தனலட்சுமி நகர், திடீர்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்து தெருக்களிலும், குடியிருப்புகளையும் தேங்கி வருகிறது.
இதுகுறித்து அ.தி.மு.க., வார்டு கவுன்சிலர் பத்மாவதி, நகராட்சியில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், நேற்று மதியம் விழுப்புரம், தக்கா தெரு சந்திப்பில், பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்வதற்கு வந்த நகராட்சி கழிவுநீர் உறிஞ்சும் வாகனத்தை அப்பகுதி மக்கள் சிலர், கவுன்சிலர் பத்மாவதி தலைமையில், சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு வாகனம் மட்டுமே நகராட்சியில் உள்ளதால், உடனே வந்து அடைப்பை சரிசெய்ய முடியவில்லை என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர். விழுப்புரம் டவுன் போலீசார் வந்து, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கவுன்சிலர் பத்மாவதி கூறியதாவது:
எங்கள் 8 வது வார்டில், கடந்த 4 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை.
சாலை சீரமைப்பு, பாதாள சாக்கடை சுத்தம் செய்தல், குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட எந்த பணிகளும் சரியாக நடக்கவில்லை. நகர மன்ற கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. அ.தி.மு.க., கவுன்சிலர் என்பதால், எனது வார்டை புறக்கணிக்கின்றனர். இந்த பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்வதற்கு வாகனத்தை அனுப்பும்படி ஒரு மாதமாக கேட்டும் அனுப்பவில்லை. அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது குறித்து, நகராட்சி கமிஷனரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.