Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கடையில் வேலைக்கு சேர்ந்த 'வாலிபால்'பாலா

கடையில் வேலைக்கு சேர்ந்த 'வாலிபால்'பாலா

கடையில் வேலைக்கு சேர்ந்த 'வாலிபால்'பாலா

கடையில் வேலைக்கு சேர்ந்த 'வாலிபால்'பாலா

ADDED : ஜூலை 11, 2024 04:39 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம் : விழுப்புரத்தைச் சேர்ந்த தலைமை காவலர் பாலா என்கிற பாலமுருகன், 41; இவரது தந்தை கொத்தனார் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். விழுப்புரம் மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியில், கடந்த 2003 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படிப்பை பாலமுருகன் முடித்தார். பள்ளியில் படிக்கும்போதே, கைப்பந்து போட்டி மற்றும் பயிற்சியின் போது தவறாமல் பங்கேற்று வந்தார்.

பின், குடும்ப சூழ்நிலை காரணமாக கடையில் வேலைக்கு சேர்ந்தார்.இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வாலிபால் பயிற்சியாளர் மணி, ( தற்போது அரசு போக்குவரத்து கழகத்தில் பணி புரிகிறார்.) மற்றும் கைப்பந்து பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மணவாளன் ( தற்போது நகர் மன்ற கவுன்சிலராக உள்ளார்) இருவரும், பாலமுருகன் தொடர்ந்து படிக்க வலியுறுத்தினர். அவரது தந்தையிடம் பேசி, விழுப்புரம் இ.எஸ்., ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் செந்தில்குமாரிடம் அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து, 2004ம் ஆண்டில், விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக்கில் டிப்ளமா சிவில் இஞ்சினியரிங் படிப்பில் பாலமுருகன் சேர்க்கப்பட்டார். இவருக்கு படிப்பு, உணவு, கைப்பந்து பயிற்சி செலவுகளை, இ.எஸ். ஸ்போர்ட்ஸ் அகாடமி ஏற்பதாக செந்தில்குமார் தெரிவித்தார்.

இதையடுத்து பாலமுருகன் உள்ளிட்ட வீரர்கள் அடங்கிய, விழுப்புரம் கைப்பந்து அணி 2005ம் ஆண்டு , மாநில அளவிலான பாலிடெக்னிக் அணிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள், இவர்கள் அணி கோப்பையை வென்றது.

தொடர்ந்து தீவிர விளையாட்டு பயிற்சி செய்ததால், 2008ம்ஆண்டு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின்படி, பாலமுருகன் தமிழக காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து 16 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர் தற்போது தலைமை காவலராக உள்ளார். இன்று வரை, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை கடைபிடித்து வருகிறார்.

இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்தினால், உடல் நலத்தை காப்பதுடன், அரசு பணிக்கு செல்லும் வாய்ப்பு காத்திருக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us