/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரம் - புதுச்சேரி நான்கு வழிச்சாலை 'ரெடி' ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல் விழுப்புரம் - புதுச்சேரி நான்கு வழிச்சாலை 'ரெடி' ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்
விழுப்புரம் - புதுச்சேரி நான்கு வழிச்சாலை 'ரெடி' ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்
விழுப்புரம் - புதுச்சேரி நான்கு வழிச்சாலை 'ரெடி' ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்
விழுப்புரம் - புதுச்சேரி நான்கு வழிச்சாலை 'ரெடி' ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்
ADDED : ஜூன் 18, 2024 04:33 AM

விழுப்புரம்: 'விழுப்புரம் - புதுச்சேரி இடையிலான நான்கு வழிச்சாலை, வரும் ஆகஸ்ட் மாதத்தில் பயன்பாட்டிற்கு வருகிறது' என, நகாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையிலான 180 கி.மீ., துாரத்துக்கு, நான்கு வழிச்சாலை பணிகள், நான்கு கட்டங்களாக நடக்கிறது. விழுப்புரம் - புதுச்சேரி (எம்.என்.குப்பம்) 29 கி.மீ.,; புதுச்சேரி - கடலுார், பூண்டியாங்குப்பம் 38 கி.மீ.,; பூண்டியாங்குப்பம் - மயிலாடுதுறை, சட்டநாதபுரம் 57 கி.மீ.,; சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் 56 கி.மீ., என நான்கு பிரிவுகளாக பணிகள் நடந்து வருகிறது.
முதல்கட்டமாக, விழுப்புரம் - புதுச்சேரி இடையிலான சாலையை லோக்சபா தேர்தலுக்கு முன்பே பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது.
ஆனால், சாலைப்பணி முழுதும் முடிந்த நிலையில், கெங்கராம்பாளையம் பைபாஸ் சந்திப்பு பாலத்தின் மீது, 2 அதிஉயர் மின் டவர் லைன்கள் செல்வதாலும், கண்டமங்கலம் ரயில்வே பாலம் கட்டுமானப் பணி தாமதத்தாலும் திட்டமிட்டபடி சாலையை திறக்க முடியாமல் போனது.
இப்பணிகளை இம்மாதத்திற்குள் முடித்திட தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி எம்.என்.குப்பம் முதல், விழுப்புரம் ஜானகிபுரம் வரை, சாலைப் பணிகள் முழுதும் முடிக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளில், கடந்த 6 மாதங்களாக வாகனங்கள் தற்காலிகமாக சென்று வருகின்றன. இதில், வளவனுார் - மதகடிப்பட்டு இடையே கெங்கராம்பாளையத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டு தயாராக உள்ளது.
இந்த திட்டத்தில், விழுப்புரம் ஜானகிபுரம் முதல், வளவனுார் அடுத்த கெங்கராம்பாளையம் வரை 16 கி.மீ., துார புறவழிச் சாலைப்பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.
இதில், வி.கே.டி., சாலை குறுக்கிடும் மேம்பாலம், தென்பெண்ணை ஆற்று மேம்பாலம், 2 ரயில்வே மேம்பாலங்கள் முடிக்கப்பட்டு சில மாதங்களாக சாலை தற்காலிக பயன்பாட்டில் உள்ளது.
மிகப்பெரிய ஜானகிபுரம் ரயில்வே மேம்பாலம் பணி 2 மாதத்துக்கு முன் முடிக்கப்பட்டு, தற்போது அதனுடன் இணைந்து நடந்து வரும் ரவுண்டானா மேம்பால பணியும் முடிந்துள்ளது.
அங்கு, சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலை மார்க்க வாகனங்கள் நேரடியாக செல்லும் வகையில் இணைந்த இரட்டை பாலமும், விழுப்புரம் - புதுச்சேரி மற்றும் புதுச்சேரி - திருச்சி மார்க்கங்களை இணைக்கும் வளைவு பாலமும் இணைந்து ரவுண்டானா பாலமாக கட்டப்பட்டுள்ளது. நீண்ட காலமாக பணிகள் முடிந்து, தற்போது பாலம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதனால், புதுச்சேரி மார்க்க வாகனங்கள் விழுப்புரம், வளவனுார் நெரிசலில் சிக்காமல் புதிய புறவழிச் சாலையை பயன்படுத்துகின்றன. தற்போது, ஜானகிபுரம் - கெங்கராம்பாளையம் இடையே நான்கு வழிச்சாலை, இருபுறமும் பசுமை வயல்வெளிகளுக்கு இடையே ரம்யமாக உள்ளது.
இப்பணிகள் குறித்து, நகாய் திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை திட்டப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, விழுப்புரம் - புதுச்சேரி வரையிலான சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இதில், கண்டமங்கலம் ரயில்வே பாலம், வளவனுார் உயர்மட்ட பால பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை இம்மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், கெங்கராம்பாளையத்தில் குறுக்கிடும் மின்சார டவர் லைன்கள் மாற்றியமைக்கும் பணிகள் முடியவில்லை. அங்கு 12 புதிய டவர்கள் அமைத்து லைன்கள் அமைக்க தயாராக உள்ளது. அதற்கு மின்நிறுத்தம் செய்ய அனுமதி தர மின்வாரியம் தாமதப்படுத்தி வருகிறது. அதனால், அங்கு மாற்று ஏற்பாடாக, தற்காலிக டவர் அமைத்து, பகுதியளவு மின்தடை செய்து பணிகளை முடிக்க ஏற்பாடு செய்துள்ளோம். உரிய அனுமதி கிடைத்தால் 15 நாளில் பணிகள் முடிக்கப்படும்.
கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலத்திற்கு, ரயில்வே துறை படிப்படியாக அனுமதி வழங்குவதால் தாமதமாகிறது. இருப்பினும் இப்பணிகளை விரைந்து முடித்து, வரும் ஆகஸ்ட் மாதம் சாலை முழுவதும் பயன்பாட்டிற்கு வரும்' என்றனர்.