Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

ADDED : ஜூலை 22, 2024 01:28 AM


Google News
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் செயல்படும் பள்ளி, கல்லுாரி விடுதிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை 23ம் தேதி கடைசி நாளாகும்.

கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லுாரி விடுதிகளுக்கு இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விடுதி மேலாண்மை மென்பொருள் மூலம் நடத்தப்பட உள்ளது.

மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்கள் விடுதி என 51 விடுதிகள் செயல்படுகிறது. இந்த விடுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு 85 சதவீதம், மிகவும் பிற்படுத்தபட்டோர் வகுப்பினருக்கு 10 சதவீதம், பிற வகுப்பினருக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவு, உறைவிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 4 செட் சீருடைகள், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள், வினா வங்கி இலவசமாக வழங்கப்படுகிறது. விடுதிகளில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதிக்கும், மாணவர் வசிக்கும் இடத்திற்கும் 5 கி.மீ., துாரத்திற்கு மேல் இருக்க வேண்டும். 5 கி.மீ., நிபந்தனை மாணவிகளுக்கும், பெற்றோரை இழந்த மாணவர்களுக்கும் பொருந்தாது. தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை சம்பந்தபட்ட விடுதி காப்பாளரிடம் பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களோடு பாஸ்போர்ட் அளவு போட்டோ 3, வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்க நகல், ஜாதி, வருமானம், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், மதிப்பெண் பட்டியல் நகல், நன்னடத்தை சான்று, ரேஷன் கார்டு, ஆதார் நகல், கல்வி நிலைய தலைவர் மூலம் அளிக்கப்படும் படிப்பு சான்றிதழோடு சம்பந்தபட்ட விடுதி காப்பாளரிடம் நாளை 23ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us