Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நான்கு வழிச்சாலையில் குறுக்கிடும் 'மின் டவர்' மாற்றி அமைக்கும் பணி தீவிரம்

நான்கு வழிச்சாலையில் குறுக்கிடும் 'மின் டவர்' மாற்றி அமைக்கும் பணி தீவிரம்

நான்கு வழிச்சாலையில் குறுக்கிடும் 'மின் டவர்' மாற்றி அமைக்கும் பணி தீவிரம்

நான்கு வழிச்சாலையில் குறுக்கிடும் 'மின் டவர்' மாற்றி அமைக்கும் பணி தீவிரம்

ADDED : ஜூன் 24, 2024 05:29 AM


Google News
Latest Tamil News


விழுப்புரம், : விழுப்புரம் அருகே புதிய நான்கு வழிச்சாலையில் குறுக்கிடும், மின்சார டவர் லைன்களை புதிதாக மாற்றி அமைக்கும் திட்டத்தில், முதற்கட்டமாக தற்காலிக டவர் லைன்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை திட்டத்தில், விழுப்புரம் - புதுச்சேரி இடையே முதற்கட்டமாக 29 கி.மீ., துாரம் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதில், வளவனுார் பைபாஸ் சந்திக்கும் புதிய மேம்பாலம் பகுதியில், சென்னை, புதுச்சேரிக்கு செல்லும் அதி உயர் மின்னழுத்த (400 கேவிஏ) நெய்வேலி மின்சார டவர்கள் குறுக்கிட்டு செல்வதால், அந்த பணிகள் மட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதற்காக, நகாய் அதிகாரிகள், மின்துறை பவர் கிரிட் (டவர் லைன்) பிரிவில் அனுமதி பெற்று, நான்கு வழிச்சாலை திட்ட ஒப்பந்த நிறுவனத்தினர் மூலம், அங்கு புதிய டவர்கள் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

அங்குள்ள பழைய டவர்களுக்கு பதிலாக புதிதாக உயரமாக டவர் அமைக்கும் பணிகள் நடக்கிறது. கெங்கராம்பாளையத்தில் 5, அற்பிசம்பாளையத்தில் 2, வளவனூரில் 3, மல்ராஜன்குப்பத்தில் 2 என, 12 டவர்கள் அமைக்கும் பணிகள் கடந்த 6 மாதங்களாக நடந்து வருகிறது.

தொடக்கத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க தாமதம் ஆனதால் பணிகள் பாதித்தது. பிறகு, இழப்பீடு வழங்கி, பணிகள் தொடங்கியது. அங்கு 7 புதிய டவர்கள் அமைக்கப்பட்டு, ஒருபுறம் லைன் பிடித்து தயாராக வைத்தனர்.

இந்த லைன்களை பிடித்து, புதிய டவர்களில் இணைப்பு வழங்க, மின்துறையின் பவர் கிரீட் (லைன் பிரிவு) துறை அனுமதி வழங்க வேண்டும். அவர்கள் மின் துண்டிப்பு செய்து, அனுமதி வழங்கினால் தான், புதிய டவர்களிலிருந்து மின்சார லைன்களை பிடித்து இணைப்பு வழங்க முடியும்.

தேர்தல் காரணமாக அனுமதி வழங்குவதில் தாமதம் இருந்தது. அனுமதி கிடைக்கவில்லை என கூறி வந்தனர்.

இந்நிலையில், பவர் கிரீட் நிறுவனம் மூலம், முதலில் தற்காலிகமாக, புதிய டவர்கள் மூலம் மின் சப்ளை மாற்றியமைக்க அனுமதி அளித்துள்ளனர்.

அதன்படி, கடந்த 22ம் தேதி மாலை கெங்கராம்பாளையத்தில் பவர் சப்ளையை நிறுத்தி, பணிகளை தொடங்க ஏற்பாடு செய்தனர். ஆனால், மழை பெய்ததால், அந்த பணி நிறுத்தப்பட்டது.

பிறகு நேற்று 23ம் தேதி காலை தற்காலிக டவர் மூலம், மின்சார லைன் இணைப்பு வழங்குதற்கான பணிகள் நடந்தது. பவர் கிரீட் அதிகாரிகள் முன்னிலையில், ஒப்பந்த நிறுவனத்தினர் தற்காலிக லைன் இழுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த பகுதி விவசாய நிலத்தில் பொருள்களை சேதப்படுத்தியதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என சிலர் பிரச்னை செய்ததால், சிறிது நேரம் பணி பாதித்தது. அதற்குரிய இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தால், மீண்டும் மாலையில் பணி தொடங்கி நடந்தது.

இது குறித்து, பவர் கிரீட் அதிகாரிகள் கூறுகையில், 'இந்த வழியாக புதுச்சேரி செல்லும் 400 கேவிஏ டவர் லைன்கள் புதிதாக மாற்றியமைக்கும் பணிகள் நடக்கிறது. முதலில், தற்காலிகமாக டவர் அமைத்து, புதுச்சேரிக்கான பழைய லைனை மாற்றியமைத்து, பவர் வழங்கப்படும்.

அதற்கான பணிகள் இப்போது நடக்கிறது. இதற்கு உள்ளூர் லைன் சப்ளை மட்டும் நிறுத்தப்பட்டது. இந்த பணிகள் இன்று (24ம் தேதி) முடிக்கப்பட்டு, தற்காலிக லைன்கள் மூலம் சப்ளை மாற்றி வழங்கப்படும். அதன் பிறகு, உயரமான டவர்கள் மூலம், நிரந்தரமாக, இந்த டவர் லைன்கள் மாற்றியமைக்கப்படும். அதற்கு சில நாட்கள் ஆகும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us