ADDED : ஜூலை 04, 2024 10:01 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில் சேதமடைந்த சுதாகர் நகர் சாலை, 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் தார் சாலை போடப்பட்டது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே செல்லும் சுதாகர் நகர் சாலை, நகரின் முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கிறது.
இந்நிலையில், சுதாகர் நகர் சாலை தொடக்கத்தில் 100 மீட்டர் தொலைவுக்கு மிகவும் தாழ்வாகவும், சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.
மழையின்போதும், அடிக்கடி கழிவுநீர் வழிந்தும் அந்த இடங்களில் குளம் போல் தேங்கியதால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும், மிகுந்த அவதியடைந்து வந்தனர்.
சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இதனையடுத்து, நகராட்சி சார்பில், சுதாகர் நகர் சாலையில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது. அந்த சாலையில், தாழ்வாக சேதமடைந்துள்ள பகுதியில் 200 மீட்டர் தொலைவுக்கு, தற்காலிகமாக புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டு சீரமைத்துள்ளனர்.