/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாவட்ட செயலாளர் பதவி மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள் மாவட்ட செயலாளர் பதவி மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்
மாவட்ட செயலாளர் பதவி மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்
மாவட்ட செயலாளர் பதவி மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்
மாவட்ட செயலாளர் பதவி மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்
ADDED : ஜூன் 04, 2024 05:28 AM
தி.மு.க.,வில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவியைப் பிடிக்க கட்சியினரிடையே முட்டி மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், தி.மு.க.,வில் நிர்வாக வசதிக்காக மாவட்ட செயலாளர் பதவியை இரண்டாக பிரித்து, வடக்கு மாவட்டத்திற்கு அமைச்சர் மஸ்தான், தெற்கு மாவட்டத்திற்கு மறைந்த புகழேந்தி எம்.எல்.ஏ.,வும் நியமிக்கப்பட்டனர்.
அமைச்சர் பொன்முடிக்கு மாநில பதவி வழங்கப்பட்டது. அப்போது, அ.தி.மு.க.,வில் இருந்து வந்த லட்சுமணன், நேரடியாக தி.மு.க., தலைமையின் செல்வாக்குடன் தி.மு.க.,வில் இணைந்தார்.
அவருக்கு தலைமை அளித்த உறுதிப்படி விழுப்புரம் தொகுதி வழங்கப்பட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார்.
இவர், தலைமை அளித்த மிக முக்கிய 2வது வாக்குறுதியான, மாவட்ட செயலாளர் பதவியை கேட்டு, விடாப்படியாக மீண்டும் தலைமையை வலியுறுத்தி வருகிறார்.
இதனால் மாவட்டத்தை மூன்றாக பிரித்து, லட்சுமணனை மாவட்ட செயலாளராக நியமிக்க தலைமை முடிவு செய்தது. ஆனால், பொன்முடி தனது செல்வாக்கால் அதனை தடுத்து வந்தார்.
இதனால் லட்சுமணன் எம்.எல்.ஏ., அடிக்கடி பல நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்பட்டு, தனி அணியாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் உடல் நலக் குறைவால் மாவட்ட செயலாளர் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி இறந்தார். இதனால், மாவட்ட செயலாளர் பதவி லட்சுமணனுக்கு வழங்கப்படும் என கட்சியினரிடையே எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அமைச்சர் பொன்முடி, தனது மகன் கவுதம சிகாமணிக்கு மாவட்ட செயலாளர் பதவியைப் பெற தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
தேர்தல் நேரத்தில் புகழேந்தி மறைந்த நிலையில், அடுத்த சில நாட்களிலேயே தி.மு.க., மாவட்ட பொறுப்புகளை கவனிக்கும் இடத்தில் கவுதம சிகாமணியை களம் இறக்கியதோடு, எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவரை அழைத்துச் சென்று முன்னிலைப்படுத்தி வருகிறார்.
மாவட்ட நிர்வாக பொறுப்பை மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரனும், கவுதம சிகாமணியும் கவனித்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் போன்றவற்றில் லட்சுமணன் புறக்கணிக்கப்பட்டு, கவுதம சிகாமணி முன்னிலைப்படுத்தி அவர் தலைமையில் கூட்டம் நடக்கிறது.
சமீபத்தில் தொகுதி வாரியாக வி.சி., கட்சியைச் சேர்ந்த லோக்சபா தொகுதி வேட்பாளர் ரவிக்குமார் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது.
அதில், லட்சுமணன் எம்.எல்.ஏ., புறக்கணிக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் கூட்டமும் கவுதம சிகாமணி தலைமையில்தான் நடந்தது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கவுதம சிகாமணியை நிறுத்தினால், மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காது என்பதால், அதனை அமைச்சர் தரப்பு விரும்பவில்லை.
விழுப்புரம் லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்து, செல்வாக்கை நிரூபித்து, இழந்த மாவட்ட செயலாளர் பதவியை தனது மகன் கவுதம சிகாமணிக்கு பெற்றுத்தந்து, செல்வாக்கை நிலை நிறுத்த அமைச்சர் பொன்முடி தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
விழுப்புரம் தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு இப்படி ஒரு போட்டி உள்ளதால், இருதரப்பையும் சமாதானம் செய்யும் வகையில், விழுப்புரம், திருக்கோவிலுார் தொகுதி மாவட்ட செயலாளராக கவுதம சிகாமணியும், விக்கிரவாண்டி, வானுார் தொகுதிக்கு மாவட்ட செயலாளராக லட்சுமணனையும், லோக்சபா ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு நியமிக்க தலைமை முடிவு செய்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.