/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மெமு ரயிலாக மாறிய மயிலாடுதுறை- சேலம் ரயில்: கூட்ட நெரிசலால் பயணியர் அவதிமெமு ரயிலாக மாறிய மயிலாடுதுறை- சேலம் ரயில்: கூட்ட நெரிசலால் பயணியர் அவதி
மெமு ரயிலாக மாறிய மயிலாடுதுறை- சேலம் ரயில்: கூட்ட நெரிசலால் பயணியர் அவதி
மெமு ரயிலாக மாறிய மயிலாடுதுறை- சேலம் ரயில்: கூட்ட நெரிசலால் பயணியர் அவதி
மெமு ரயிலாக மாறிய மயிலாடுதுறை- சேலம் ரயில்: கூட்ட நெரிசலால் பயணியர் அவதி
ADDED : ஜூன் 12, 2024 05:34 PM
திருச்சி: மயிலாடுதுறை-- சேலம் ரயிலில் பெட்டிகளை குறைத்து, மெமு ரயிலாக இயக்குவதால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
மயிலாடுதுறையில் இருந்து, திருச்சிக்கு இயக்கப்பட்ட பயணியர் ரயில், கடந்த ஆண்டு முதல், சேலம் வரை நீட்டிக்கப்பட்டது. காலை 6:20 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் இந்த ரயில் கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக காலை 9:30 மணிக்கு திருச்சி வந்தடையும்.
இங்கிருந்து காலை 9:40 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல் வழியாக மதியம் 1:45 மணிக்கு சேலம் சென்றடையும். மறு மார்க்கத்தில் சேலத்தில் இருந்து மதியம் 2:05 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மாலை 5:55 மணிக்கு திருச்சி வந்தடையும். 6:05 மணிக்கு புறப்பட்டு, இரவு 9:45 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், வேலைக்கு வந்து செல்வோர் முன்பதிவு இல்லாத இந்த ரயில் சேவையை அதிகம் பயன்படுத்தி வந்தனர். 12 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரயிலில், கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும், என்று பயணியர் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால், ரயில்வே நிர்வாகம், கடந்த 8ம் தேதி முதல், 12 பெட்டிகளுடன் இயங்கிய இந்த ரயிலை, எட்டு பெட்டிகள் கொண்ட மெமு ரயிலாக மாற்றி, இயக்கி வருகிறது.
ஏற்கனவே, கூட்ட நெரிசல் மிகுந்திருந்த இந்த ரயிலில், திடீரென பெட்டிகள் குறைத்து இயக்குவதால், ஏராளமான பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். வழக்கமாக பயன்படுத்திய பயணியர் உட்கார இடம் இன்றி, இந்த ரயிலில் பயணம் செய்கின்றனர்.
எனவே, மயிலாடுதுறை- சேலம் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.